Tuesday, October 02, 2007

காந்தி ஜெயந்தி


காந்தியின் புதிய வேதம்



காலவரலாற்றில், காலம் கற்பமாகி வெற்றியாளர்களை


பிரபஞ்ச வெளியில்பிரசவிக்கிறது. அந்தவகையில்
வளர்பிறைபோல் வரலாற்று வாசற்படியில்வந்துதித்த
வர்தான் மகாத்மா காந்தியடிகள்.

நேர்மை, உண்மை, எளிமை இன்னும் எத்தனையோ
கற்றுக்கொள்ளும் பாடங்கள்அவரிடம் அதிகம்; ஆனால்,
நாம் குரங்குகள் சொல்லும் தத்துவங்களை விட்டுவிட்டு,
குரங்குகளை மட்டும் எடுத்துக்கொண்டோம்;

தேச எல்லைகளை எல்லாம் கடந்துஎல்லோர் உதடுகளும்

அதிகமாக உச்சரித்த பெயர் காந்தியாகத்தானிருக்கும்.
தன் வாழ்க்கையில் சோதனைகளையும், வேதனைகளையும் அவமானங்களையும், தழும்புகளையும்சகித்துக்கொண்டு

மக்களுக்காக உழைத்தார். அவர் அஹ’ம்சைக்கு தென் ஆப்பிரிக்காவில்முதல் வெற்றி கிடைத்தது.

காந்தி இந்தியாவில் கால் பதித்தவுடன் காலனி
அரசுக்கு காலன் பிடித்துவிட்டான். தொடர்

போராட்டம், ஒத்துழையாமை இயக்கம், உப்பு

சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம், வெள்ளையனே

வெளியேறு இப்படி பல்வேறு சாத்வீகப் போராட்டம்...
ஆங்கிலேயர்களின் உள்ளத்தில் அச்சத்தை விளைவித்தது.

இத்தனை மனித சக்தியை எப்படி ஒன்றினைத்தார்?

எதனால், எவையால்? என்ற கேள்விகள் ஆங்கிலேயரை
துளைத்தன. அன்பினால், தன் எளிமையினால், சத்தியத்தால் கவர்ந்தார்என்பதே அவர்களின் கண்டுபிடிப்பு- எத்தனை உண்மை?

லட்சக்கணக்கான மக்கள்கூட்டத்தில்அமைதி என்றவுடன் எங்கு போனது அத்தனை சத்தம்? தன்னைப் பார்க்கஅலைஅலையாய், அணிஅணியாய் மக்கள், காந்தி என்ற மந்திர சக்தி மக்கள் சக்தியாய் ஈர்த்தது. மகத்தான மனிதன் மண்ணுக்கு வந்ததே மனிதர்கள் செய்த தவம் என்று சொல்லலாம்.காலம்தான் தோள்களில் தூக்கி மாலையிட்டது; மகுடத்தை தந்த போதும் மக்கள் மனதில் இருந்தாலே போதும் என மறுத்த காந்தியைப்போல் உலகத் தலைவர்கள் எவரும் இல்லை.

எல்லா மதங்களும் சொல்கின்றன. அன்பு செய், அரவணை என்று.
ஒரு கன்னத்தில் அறைந்தால் நீ மறு கன்னத்தைக் காட்டு என்றது மதம்;

நீ துன்புறுத்தாதே, உன்னை துன்புறுத்தினால்பொறுத்துக்கொள் என்பதே காந்தியின் புதிய வேதம்!

காந்தியடிகள் மக்களுக்கு எதைச் சொன்னாரோ, எதைப் போதித்தாரோ அதன் படியேஅவரும் நடந்தார். சொல்லுக்கும் செயலுக்கும் அவர் ஒருபோதும் முரண்பாடாகவோவேறுபாடாகவோ நடந்துகொண்டதில்லை;

அப்போது காந்தி வார்தாவில் இருந்தார். அது ஒரு சிறு நகரம்.
எல்லா வசதிகளும் கொண்டது.மற்றவர்களை கிராமங்களுக்குப்
போகச் சொல்லிவிட்டுத் தாம் மாத்திரம் ஒரு பட்டணத்திலிருந்தால் அது நன்றாயிருக்குமா?- இது அவர் மனத்தை உறுத்தியது.

தாமும் ஒரு கிராமத்திற்குகுடியேற விரும்பினார்.

உடனிருந்தவர்கள், " ஒரே ஒரு கிராமத்துக்காகமட்டும் நீங்கள் உழைக்கவில்லை, முழு இந்தியாவுக்கும் உழைக்கிறீர்கள்.
வசதி இல்லாத கிராமத்துக்குநீங்கள் போனால் வேலைகள்
தடைப்படும். இப்படி ஏதேதோ சொல்லி காந்தியை தடுத்துப்
பார்த்தனர். சொன்னதை நான் செய்கையில் கடைப்பிடிக்க
வேண்டாமா? என்று கூறிஅவர்கள் வாயை அடைத்தார்.

வார்தா நகரிலிருந்து காந்தி, சேவா கிராமத்துக்குப் போன,
புதிது. அவ்வூர்ப் பாதை ஒரு காட்டுப்பாதை. புழுதியும் மண்ணும் படிந்ததாய் இருக்கும். நடந்து போனால் கல்லும் முள்ளும் காலில் குத்தும். மாட்டு வண்டியில் போனால் இடுப்பு ஒடிந்து போகும்.

அப்படியிருந்தும் உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் அவரைப்
பார்க்கப் பலர் வந்த வண்ணமிருந்தனர்.

ஒருநாள் சில ஊழியர்கள் காந்தியிடம் சென்று " தாங்கள் அரசாங்கத்துக்கு ஒரு வரி எழுதிப்போடுங்கள். நல்ல சாலை போட்டுவிடுவார்கள் என்றார்கள். காந்தி அதற்கு

இணங்கவில்லை;இது மக்கள் செல்லும் பாதை இதன்

வழியே போகிறவர்களும் வருகிறவர்களும் நாம் தானே?

ஆகையால் இந்தப் பாதையை செப்பனிடும் வேலையையும் நாமே செய்ய வேண்டும் என்றார்.
அதெப்படி முடியும்? என்று கேள்வியெழுப்பினர் ஊழியர்கள்.

" மிக்க எளிது. வார்தாவிலிருந்து இங்கு வருபவர்கள் தலைக்கு
இரண்டு கல்லைக் கொண்டு வந்து போட்டால் பாதை அமைத்து விடலாம் " என்றார் காந்தி.ஊழியர்களுக்கு இந்தக் கருத்து வினோதமாயிருந்தது. அவர்கள் சிரித்தார்கள். இரண்டு கற்கள்கொண்டு வந்து போட்டால் பாதை எப்படிச் சரியாகும்? என்றார்கள் அவர்கள்.

முழுமனதுடன்செய்தால் எந்த வேலையையும் நாம் செய்து முடித்து விட முடியும் என்றார் காந்தி.
ஊழியர்களுக்கு இதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மறுநாள் முதல் அந்த யோசனை நடைமுறைக்கு வரத்துவங்கியது. வார்தாவிலிருந்து சேவா கிராமத்துக்குப் போகிறவர்கள் ஒவ்வொருவரும் இரண்டு கற்களை தங்களுடன் எடுத்து வந்து போட்டார்கள். பலருக்கு இது வேடிக்கையாகத்தானிருந்தது. ஆனால் காந்தி எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பெரிய பெரிய தலைவர்களும் அரசியல்வாதிகளும்கூட
காந்தியைப் பார்க்கச் சென்ற போதெல்லாம்கற்களை
எடுத்துகொண்டு போய் அங்கு போடத்தவறுவதில்லை.
காந்தியும் அவர்களுடையவாழ்க்கைத் துணைவியாருமான
கஸ்தூரி பாயும் கூட அவ்விதமே செய்து வந்தார்கள்.


கற்குவியல் பெருகிக் கொண்டே வந்தது.ஒரு நாள்

ஆசிரமவாதிகளுள் ஒருவர் சொந்த வேலையாய்த் தம்
ஊருக்குப் புறப்பட்டுப் போனார்.சில மாதங்கள் கழித்துத்
திரும்பி வந்த போது வார்தாவிலிருந்து சேவா கிராமத்துக்குச்
செல்லும் அந்தப் பாதை பட்டணத்துச் சாலை போலாகியிருந்ததைக் கண்டு அதிசயித்துப் போனார்.

இருகல், இரு கல் ஒரு சாலை. இது தான் காந்தி நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம்.

சுவாமி விவேகானந்தர் சொல்றார்," ஏழைகளின் துயரக் கண்ணீர் கண்டு எவன் இரக்கக்கண்ணீர் வடிக்கிறானோ, அவனே மகாத்மா; மற்றவர்கள் துராத்மாக்கள் " என்கிறார்.
மகாத்மாவை பற்றிக் கேட்டோம்... துராத்மா....

நம்ம ஊர் அமைச்சர் ஒருத்தர்;

காந்தியவாதியாகவேகாட்சியளிப்பவர்.

அயல் நாட்டுல மகாத்மாவுக்காக ஒரு விழா எடுக்கிறோம்; அவசியம்வந்து கலந்து சிறப்பிக்கணும்னு அமைச்சரைக் கேட்டுக்கிட்டாங்க. அமைச்சரும்ஒப்புக்கொண்டு அந்த நாட்டுக்குப் போனார்.
அங்க மகாத்மாவின் உருவச் சிலையைத் திறந்துவச்சுட்டு

மக்கள் மனசு நெகிழப் பேசினார். விழா முடிஞ்சுது. அந்த நாட்டினர், அமைச்சரைபாராட்னாங்க. அவருடைய எளிமை, நடை,உடை,பேச்சு இப்படி எல்லாத்தையும் புகழ்ந்துபேசுனாங்க. ஒரு வாரம் அந்த நாட்டிலேயே தங்கி சுத்திப் பாத்துட்டு அமைச்சர் தாய் நாடுதிரும்புனார்.

விமான நிலையத்துல ராத்திரி முழுக்க கண் விழிச்சு அதிகாலையில் வரும்அமைச்சரை வரவேற்க தொண்டர்கள் காத்து இருந்தனர்.

அமைச்சர் விமானம் தரை இறங்குச்சு. விமானத்தில வந்தவங்கள்லாம் வெளிய போய்க்கிட்டுஇருந்தாங்க. அமைச்சர் வெளியவர்ற வழியைக் காணோம். அப்பறமாத்தான் தெரிஞ்சுது.அமைச்சரை கஸ்டம்ஸ்ல உக்கார வச்சுட்டாங்கன்னு. விசாரிச்சா.... அவரு காந்திசொன்னததான் செஞ்சிருக்கார்.

என்ன ஒரு சின்ன வித்தியாசம்.

அமைச்சர் கொண்டுவந்ததும் ரெண்டு கல்லுதான்; ஆனா
அது சாலை போட அல்ல...

அவரோட மனைவி காதுல போடக் கொண்டு வந்த

ரெண்டு வைரக் கல்...!?


Wednesday, August 15, 2007

விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள்





சுதந்திர வேள்வியில் திரைப்படங்கள்

கூட தங்கள் பங்களிப்பை பாங்கோடு

செய்திருப்பதைக் காண முடிகிறது.

அதர்மத்தை எதிர்க்கிற துணிச்சல்,

அக்கிரமத்தின் ஆணிவேரைக் கிள்ளி

எறிகிற பங்களிப்புக்கள் அவை.


பொத்தாம் பொதுவில் ஓய்ந்து போன

சொற்களுக்குள் ஒளிந்து கொள்ளாமல்,

நாட்டுப்பற்றினை வலியுறுத்தியும்,

அந்நியனுக்கு இங்கென்ன வேலை என்ற


உணர்ச்சிக் கொந்தளிப்பை பாமரனுக்கும் ஏற்படுத்துகின்ற

புரட்சிப் படைப்புக்களாக திரைப்படங்கள் வெளிவந்தன.

முதன் முதலாக தமிழில் பேசும்படமாக வெளிவந்தது

காளிதாஸ் திரைப்படம்! காளிதாஸ் படத்தின் கதை மகாகவி காளிதாசரின் கதை. இருந்தாலும் விடுதலை வேட்கைப்

பாடல்களை அன்றைய காலகட்டத்தில் உணர்ச்சிக்

கவியாக வடித்த பாஸ்கரதாஸ் இந்தப் படத்தில்

"ராட்டினமாம் காந்தி கைபானமாம்" என்று பாடலை

எழுதி 1930-களில் கிராமங்களில் கூட அந்தப் பாடலை

முணுமுணுக்கச் செய்தார்.


1934-ல் ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்
பத்திரிக்கை, பலகலைக்கழகம், திரைப்படத்துறை போன்ற துறைகளிலிருந்து திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர்
களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வன்முறை, பாலுணர்ச்சியைத்
தூண்டும் காட்சிகள் தவிர்க்கப்பட்டு அரசியல் கருத்துக்கள் புகுத்தப்படவேண்டும் என்ற வேண்டுகோள்கள்
செவிமடுக்கப்பட்டதால் திரைப்படத் தயாரிப்பாளர்களும்
இதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் படங்களைத் தயாரித்தளிக்க முற்பட்டனர்.
1935ல் டம்பாச்சாரி என்ற படத்தில் மேலை நாட்டுக்
கலாச்சாரம் தமிழனைச் சீரழிக்கப் போகிறது என்பதை
எடுத்துக் காட்டும் வண்ணம் அமைந்திருந்தது.
ஒரு பெண் புகைப்பிடிக்கும் காட்சியை இந்தப் படத்தில் அமைத்திருந்ததோடு மேற்கத்தியக் கலாச்சாரம் அது
நமக்குத் தேவையில்லை என்பதை வலியுறுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
எந்தப் படமாக இருந்தாலும் தேசப்பற்றோடு சில
காட்சிகளை அல்லது பாடல்கள் அல்லது ஒரு சில
வசனங்கள் இல்லாமல் திரைப்படங்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.
1936-ல் வெளியான தர்மபத்தினி காந்தியின் ராட்டையைத்
தன் வாழ்வின் பிடிப்பாக எண்ணிப் போராடி வெற்றி பெறுகின்ற உணர்ச்சிக் காவியமாக வெளிவந்தது. அதே ஆண்டில்
வெளியான இரு சகோதரர்கள் வெள்ளையர்களை
வெகுண்டெழச் செய்யும் விதமாக அவர்களின் ஆட்சி
அலங்கோலத்தை வெளிப்படுத்தும் விதமாக வந்தது.
1938ல் விடுதலைப் போராட்ட கால பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான மு.வ. ஸ்ரீ ராமானுஜர் என்ற படத்துக்கு வசனம் எழுதினார். சுதந்திரக் கனலை மூட்டும் வண்ணமாக வசனங்களைத் தீட்டியிருந்தார்.
1939-ம் ஆண்டு கல்கியின் தியாக பூமி புரட்சிக் கருத்துக்களை
நறுக்குத் தெரித்தாற் போன்ற வசனங்களைத் தாங்கி
வெளியானது. அதே ஆண்டு தமிழக மந்திரிசபை ராஜினாமா
செய்ததை அடுத்து ஆங்கில அரசு இந்திய சுதந்திரப் பிரச்சாரத்தைப் புகுத்தி படங்கள் எடுக்கக்கூடாது என்று ஆங்கிலேய அரசு உத்திரவிட்டது. அதே நேரத்தில் திரைப்பட இயக்குனர் கே.சுப்பிரமணியம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையைத்
துவங்கி நடிகர்கள் அணியும் ஆடைகள், ஆபரணங்கள் போன்ற அனைத்தும் சுதேசியாக இருக்க வேண்டும் என்று துணிச்சலாக வற்புறுத்தினார்.
1940-ம் ஆண்டு வெளிவந்த மகாத்மா காந்தி வரலாற்றுப்
படத்தை ஏ.கே.செட்டியார் தயாரித்திருந்தார். தொடர்ந்து
உலகப்போரும் மூண்டிட அன்றையப் போர் நிகழ்வு,
அதனையொட்டிய சமூக வாழ்க்கையை வெளிச்சமிட்டுக்
காட்டும் வண்ணம் படங்கள் வெளியானது.
1945,46-ம் ஆண்டுகளில் முஸ்லீம்களுக்கு தனி நாடு
வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து அதன் தொடர்பாக போராட்டங்கள், வன்முறை, கலவரம் வெடிக்க இந்து
முஸ்லீம் ஒற்றுமையைச் சித்தரிக்கும் படங்கள்
வெளியாயின. ஊமைப்படக் காலத்தில் ஆங்கிலேயர்
நிறுவிய சினிமாட்டோகிராப் விசாரணைக் கமிசன்
பாரதியாரின் தேசபக்திப் பாடல் தொகுப்புக்குத் தடை
விதித்தது. இருந்தாலும் அதையும் மீறி பாரதியாரின்
பாடல்கள் ஒலித்தன. எத்தனையோ இடர்பாடுகளுக்
கிடையேயும் நல்ல கருத்துக்கள் மக்களுக்குப் போய்ச்
சேர வேண்டும் என்ற வேட்கை அன்றைய கால
கட்டத்தில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும்
கலைஞர்களுக்கும் இருந்தது.
ஆங்கிலேய அடக்குமுறைகளைத் தாண்டி சுதந்திர
தாகத்தை தமிழக மக்களுக்கு தமிழ்த் திரைப்படங்கள்
ஊட்டியது. சுதந்திரம். அத்தகைய அரும்பணியாற்றிய
தமிழ் திரைப்பட வரலாற்றை இன்றைய திரைப்படத்
துறையினர் நினைவில் கொள்ளுதல் முக்கியம். நல்ல
செய்திகளை தங்கள் திரைப்படங்கள் மூலம் வழங்கா
விட்டாலும் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தைக் கலந்து
புதுமொழி உருவாக்கும் அவலம், தமிழ்ப் பண்பாடுகளை
சிதைத்து விடாமலிருந்தாலே தமிழர்களுக்குச் செய்யும்
நற்காரியமாக அமையும்.

அகிம்சையின் வலிமை....ஆகஸ்ட் 15



இன்றைக்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்க நம்மால் முடிகிறது.
சும்மாவா சுதந்திரம் கிடைத்தது?
அந்த வீர சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிர்
ஈந்தவர் எத்தனை?
தங்கள் சுகபோகங்களை சுட்டுப் பொசுக்கிக் கொண்டு வியர்வை
சிந்தி இரத்தம் சிந்தி , உறவுகளை இழந்து, காவலர்களின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு தங்கள் அவயவங்களை
இழந்து தங்களை நாட்டுக்காக மெழுகுவர்த்தியாக
உருக்கிக் கொண்டவர்கள்
எத்தனை எத்தனை பேர்கள்!

61 வயது காந்தி 241 மைல் தன் பாதத்தை தேய்த்து உடலை
வருத்தி நடத்திய தண்டி யாத்திரை; பட்டினிப் போர் , உண்ணா
நோன்பு, ஆசிரமம், சிறைச்சாலை என்று உடலை வருத்தி
உருக்கிக் கொண்ட மகாத்மா!
அந்த மகாத்மாவோடு உருகி உதிர்ந்த தியாகிகள்
எத்தனை பேர்கள்?
அந்த மெழுகுவர்த்திகள் தந்த வெளிச்சத்தில் இன்று நாம்...!
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஒரு முக்கிய வரலாற்று
நிகழ்ச்சியாக அமைந்ததுதான் வெள்ளையனே வெளியேறு
இயக்கம். இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான்
இந்தியாவை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது.

அச்சமயத்தில், பிரிட்டிஷாருக்கு இந்தியர்கள் ஆதரவு அளிக்க வேண்டுமானால் இந்தியாவின் அதிகாரத்தையும் முழு
உரிமையையும் இந்தியர்களுக்கே திருப்பி அளிக்க வேண்டும்
என்று காந்தியடிகள் கூறினார்.பர்மா, வங்காளம் உள்ளிட்ட
பகுதிகளைத் தாண்டி முன்னேறிக் கொண்டிருந்த ஜப்பான் படையினரிடம் பிரிட்டிஷார் பின்வாங்கினர். சிங்கப்பூர்,
மலேசியா, பர்மா ஜப்பானிடம் சரணடைந்து விட்டன.

அந்நாடுகள் போரில் சீர்குலைந்தன. உணவுத் தட்டுப்பாடும்
ஏற்பட்டது. இதே நிலை இந்தியாவுக்கும் ஏற்படலாம் என்ற
அச்சம் ஏற்பட்டது. ஆகவே, இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறிவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.பிரிட்டிஷார் போரிலிருந்து நம்மை
பாதுகாப்பார்கள் என்று நினைக்காமல் நம்மை பாதுகாத்துக்
கொள்ள நமக்கு ஓர் இயக்கம் வேண்டும் என்று காந்தியடிகள் சிந்தித்தார்; சிந்தனையின் விளைவில் பிறந்த இயக்கம்தான் வெள்ளையனே வெளியேறு இயக்கம்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் காந்தி ஏன் இப்படி ஒரு
கருத்தை தெரிவிக்கிறார் என்று பல தலைவர்கள் கருதினார்கள். கோரிக்கை வைப்பதற்கு இது சரியான நேரமா என்று கூட
கேட்டனர். ஆனால், காந்தியடிகளோ, "பைத்தியக்காரன் என்று
குற்றம் சாட்டினால் கூட பொருட்படுத்த மாட்டேன்.

இந்தியாவின் விமோசனத்துக்கு செய்ய வேண்டிய கடமை
இது என்று நினைப்பேன் "என்று அப்போது காந்தியடிகள்
கூறினார்."

காங்கிரஸ் தனது விருப்பத்துக்கு இணங்காவிட்டால் ,
காங்கிரசையும் விட மகத்தான ஓர் இயக்கத்தை உருவாக்கப் போவதாக' காந்தியடிகள் எச்சரித்தார். இதனால் 1942 ஆகஸ்ட் 8ல் மும்பையில் கூடிய அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம், "வெள்ளையனே வெளியேறு' என்ற புகழ் மிக்க தீர்மானத்தை இயற்றியது. "வைஸ்ராயை சந்தித்து இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவேன். அதற்கு இரண்டு மூன்று வாரங்கள் ஆகலாம். ஆனால் அதுவரை நீங்கள் சுதந்திர குடிமகனாகக் கருதிக் கொண்டு செயல்படலாம்' என்று காந்தியடிகள் கூடியிருந்த பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசினார்.

காந்தியடிகள் வைஸ்ராயை சந்திக்கும் வரை பொறுத்திராமல், பிரிட்டிஷ் அரசு முந்திக் கொண்டது. காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்களை அன்று இரவே கைது செய்தது. காந்தியடிகள் மும்பையிலிருந்து பூனா கொண்டு செல்லப்பட்டு ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார். மறுநாள் காலை (ஆகஸ்ட் 9) இந்த செய்தியை கேள்விப்பட்டு இந்தியாவே கொதித்து எழுந்தது.

காந்தியடிகளையும் கைது செய்யப்பட்ட தலைவர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவெங்கும் ஓங்கி ஒலித்தது.

போராட்டம் புரட்சியாக உருவெடுத்தது. இப்புரட்சியை அடக்க பிரிட்டிஷார் நாடெங்கும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில்
டில்லியில் மட்டும் 76 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பொது
மக்களை காரணமில்லாமல் கைது செய்தனர். விசாரணை
இல்லாமல் தண்டனை வழங்கினர். தீவிரமான இம்மக்கள்புரட்சி, கோரமான பிரிட்டிஷ் அடக்குமுறையால் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இப்புரட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்ட வீரர்களின் உயிர்கள் காணிக்கையாக்கப்பட்டது.
தலைவர்கள் வழிகாட்டுதல் இல்லாதது, கட்டுக்கோப்பாக மக்கள் செயல்படுவதற்கு வழி தெரியாதது, பிரிட்டிஷாரின் வலிமைக்கு ஈடு கொடுக்க முடியாதது ஆகியவற்றால் இந்தப் புரட்சி அடக்கப்பட்டது. என்றாலும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்குமா...? என்ற மக்கள் மனதில் இருந்த சந்தேகம் மாறி இந்தியா எப்போது சுதந்திரம் பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அந்த எதிர்பார்ப்பு சுதந்திரமாக மலரவும் இந்த போராட்டம் அடிப்படையாக அமைந்தது.அந்தப் பரபரப்பான 1947ம் ஆண்டு
ஆகஸ்ட் 15ம் தேதி ! இந்தியா சுதந்திரம் அடைந்ததைக் கண்ட
பிறகே இறப்பேன் " என்ற காந்தியின் கண்கள் சுதந்திர இந்தியாவைத் தரிசித்தது.

அடிமை இருளில் சிக்கித் தவித்த இந்தியத் திருநாட்டு மக்கள்
சுதந்திரச் சுடரைக் கண்டனர். இந்துஸ்தானம் முழுக்க வந்தே
மாதரமும் ஜெய்ஹிந்த் கோஷங்களும் எங்கும் எதிரொலித்தது.

டில்லிப் பட்டணம் சுதந்திரக் களிப்பில் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தபோது காந்திஜி கல்கத்தாவின் சேரிப்பகுதியொன்றில் அமைதியாகச் சேவை செய்துகொண்டிருந்தார்.

இந்தியத் திருநாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த தேசத் தந்தையை வைஸ்ராய் மாளிகையில் தங்க நிகர் சிம்மாசனத்தில் வைத்து ஏந்திப் பிடிக்கத் தயாராயிருந்தனர். தன் சீடர்களான நேருவும் பட்டேலும் உப்பரிகையில் வீற்றிருக்க காந்தி எளிமையான பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். உலக சமாதானத்துக்காக, ஒற்றுமைக்காக கடவுளை வணங்கினார். ஜனங்களிடையே தேச பக்தியும், தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் வளர பிரார்த்தனைக் கூட்டத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே பேசினார்.

புத்தரும், மகாவீரரும் ஏசுநாதரும், நபிகள் நாயகமும் செய்த
மார்க்க சேவையை அன்று மகாத்மா செய்து கொண்டிருந்தார்.
இந்து - முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தினார்.


மெளண்ட்பேட்டன் கவர்னர் ஜெனரலாக இருக்க காங்கிரசு ஆமோதித்தது. ஆங்கிலேயர்களில் ஒரு வித்தியாசமான ஆசாமி மெளண்ட்பாட்டன். நேருவின் நேசக்கரங்களுக்குள் கைகோர்த்து அதிரடியாக நடவடிக்கைகளை பேட்டன் எடுத்தார். ஜின்னாவின் கண்களுக்குள் கருக்கொண்டிருந்த பாகிஸ்தான் கனவையும் நனவாக்கினார். கிழக்கு வங்காளமும், மேற்கு பஞ்சாபும், சிந்தும் பாகிஸ்தானாக உருப்பெற்றது. மற்றப்பகுதிகள் எல்லாம் இந்திய யூனியனாயின. மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத் இந்திய
யூனியனில் இணைய மறுத்து முரண்டு பிடித்தாலும் பட்டேல் நெறிப்படுத்தி ஒருங்கிணைத்தார்.

இந்தியத் துணைக் கண்டத்தில் இந்தியக்கொடி பட்டொளி வீசிப்
பறக்க ஆரம்பித்தது.ராஜாஜியை கவர்னர் ஜெனரலாக்கிவிட்டு, மெளண்ட்பேட்டன் இங்கிலாந்து இளவரசியின் திருமணத்தில் கலந்து கொள்ளப் புறப்பட்டார்.
ஆகக்கடைசி வெள்ளையனும் கப்பலேறிய பிறகு சுதந்திர
இந்தியாவை ஆட்சி செய்கின்ற காட்சியையும் காந்தி
கண்டுகளித்தார்.
நேரு முதலமைச்சர். படேல் உள்நாட்டு அமைச்சர். சண்முகம்
செட்டியார் நிதியமைச்சர். அம்பேத்கார் சட்ட அமைச்சர்; சர்தார் பல்தேவ்சிங் பாதுகாப்பு அமைச்சர். ஜெகஜீவன்ராம் தொழிலமைச்சர்; மத்தாய் போக்குவரத்து அமைச்சர்; காட்கில் சுரங்க மின்சார மந்திரி; சியாமபிரசாத் முகர்ஜி உணவு அமைச்சர்; அபுல்கலாம் ஆசாத் கல்வி அமைச்சர்; அம்ருத்கெளரி சுகாதார அமைச்சர்; கித்வாய் வர்த்தக அமைச்சர்; கோபால்சாமி அய்யங்கார் உபரி மந்திரி; ராஜேந்திர பிரசாத் அரசியல் நிர்ணயசபைத் தலைவர்; மோகன்லால் சக்சேனா அகதிகள் மந்திரி
என்று, இன்று போல இரண்டடுக்கு மூன்றடுக்கு என்றில்லாமல் மிகக் குறைந்த மந்திரி சபையோடு தேச பரிபாலனம் துவங்கியது.
மகாத்மாவின் உழைப்பு வீண்போகவில்லை! அவரின் தவம் பலித்தது.கத்தியின்றி... இரத்தம் இன்றி அகிம்சா மூர்த்தியின் கனவு நிறைவேறியது.


இந்த ஆகஸ்ட் 15!

இந்தியாவிற்குக் கிடைத்த சுதந்திர நாள் என்பதை
விட
அகிம்சையின் வலிமை அறியப்பட்ட நாள் என்பதுதான்
சரியானது.

Monday, June 04, 2007

<>தந்தையர் தினம்...!<>

தந்தையர் தினம்...!


ஒரு காம்பெளண்டின் மீது கேமரா நகர்ந்து வீட்டின் வாசல் வழியே பூங்காவிற்குள் நுழைகின்றது. வயதான அப்பாவும் மகனும் அமர்ந்திருக்கின்றார்கள். மகன் தினசரி வாசித்துக்கொண்டிருக்க அப்பா அமைதியாக இருக்கின்றார். மகனிடம் ஏதாவது பேச வேண்டும் என்பது போல இருக்கின்றது அவர் முகம். ஒரு சிட்டுக்குருவி செடிகளின் மீது அமர்கின்றது. மெதுவாக அப்பா “அது என்ன?” என கேட்கின்றார். “சிட்டுக்குருவி” என்கின்றான் சற்றே எரிச்சலுடன் மகன். இன்னும் சிறிது நேரம் கழித்து “அது என்ன?” என வினவுகின்றார். “அது தான் சொன்னேனே சிட்டுக்குருவி” என அலுத்து தினசரியில் மூழ்கின்றான். அப்பா எழுகின்றார். “எங்க போறீங்க?”. அமைதியா இரு என கைகாட்டிவிட்டு மெல்ல வீட்டினுள் செல்கின்றார். மகன் படித்துக்கொண்டே


இருக்கின்றான். தந்தை மீண்டும் பூங்காவிற்கு வருகின்றார் கையில் ஒரு டையரியுடன். பக்கம் ஒன்றை எடுத்து படிக்க கொடுக்கின்றார். அதில் இவ்வாறு எழுதி இருக்கின்றது. “என் இளைய மகனுக்கு மூன்று வயது நிரம்பி சில நாட்களாகின்றது. இன்று நாங்கள் இருவரும் பூங்காவிற்கு சென்றோம். எங்கள் எதிரே சிட்டுக்குருவி அமர்ந்தது. இது என்ன இது என்ன என 21 முறை கேட்டான். நானும் சிட்டுக்குருவி என சொல்லி ஒவ்வொரு முறையும் அவனை கட்டியணைத்தேன். அவனுடைய வெகுளித்தனம் என்னை எரிச்சறுற செய்யவில்லை…”. படித்து முடித்ததும் மகன் மெளனமாக இருக்கின்றான். தன் தந்தையை கட்டியணைத்து உச்சந்தலையில் முத்தமிடுகின்றான். கேமரா அவர்கள் அமர்ந்திருக்கும் பெஞ்சிற்கு பின்னே சென்று மரத்தை காட்டி சிட்டுக்குருவி பறப்பதோடு முடிகின்றது.

இசை என்பது சிட்டுக்குருவியின் சத்தம் மட்டும் தான்.










தந்தையர் தினம்...!
அன்னையர் தினம் வரும்,
பின்னே..... தந்தையர் தினமும்
வரும் என்பது இப்போது உலக வழக்கமாகிவருகிறது. தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமுமில்லை என்ற வைர வரிகளைவழங்கிய அவ்வை மூதாட்டி வாழ்ந்த காலத்தில் தோன்றியதா இந்த தந்தையர் தினம்?
பசுவின் கன்றைமகன் தேரிலிட்டுக் கொன்றுவிட்டான் என்பதற்காகத் தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மன்னனின் புகழ் நிலைக்கவோ இந்தத் தந்தையர் தினம்! பற்று, பாசம், நேசம், உறவு இப்படி இல்லாமல்வயதுக்கு வந்துவிட்டால் தாய் தந்தையைப் பிரிந்து தனித்து வாழுகிறதும், அண்ணன் என்னடா? தம்பி என்னடா அவசரமான உலகத்தில் என்று வாழுகிறதாகப் பலர் கருதுகிற அமெரிக்கத் திருநாட்டில்தான் இந்தத் தந்தையர் தினம் தோன்றியது!
சான்றோன் ஆக்குதல்.....

வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் அமெரிக்க இராணுவத்தில் பணிபுரிந்தவர்! 1862ல் நடந்த போரில் கலந்துகொண்ட பிறகு வாஷிங்டன் அருகேயுள்ள ஸ்போகனே (Spokane) வுக்கு குடும்பத்தோடு சென்று வசித்தார். மகள் சொனாரா டோட்டுக்கு 16வயதாகும்போது மனைவி எல்லன் விக்டோரியா மரணமடைந்தார்.தன் மனைவி இறந்ததும் 5 மகன்கள் மற்றும் மகள்களுடன் வசித்தார். அவரை மறுமணம் செய்துகொள்ள சிலர் முன்வந்தபோது மறுத்துவிட்டு பிள்ளைகளை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். வாலிபம் வீணாகிறது என்று செல்லமாகச் சொல்லி வளைத்துப் போடப் பார்த்த பெண்களின் ஆசை வார்த்தைகளுக்கு அடிமையாகிவிடாமல் தம் இல்லாள் இல்லை என்ற குறை தெரியாமல் > சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே>என்பதாக‌ பிள்ளைகளை வளர்த்து வாலிபமாக்கினார்.


அருமைக் கணவர் இருக்கும்போதே மனைவி இன்னொருவருடன் வாழ்வதும், வாழ்ந்தால் உன்னோடுதான்என்று கைப்பிடித்த மனைவி இருக்கும்போதே கணவர் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதும் அமெரிக்காவில் அங்கிங்கெனாதபடி எங்கும் அசாதாரணமாக இருக்கிறபோது தம் தந்தையின் வாழ்க்கையை மிகப்பெரிய தியாக வாழ்க்கையாகக் கருதினார் - மகள் ஸொனோரா ஸ்மார்ட் டோட்!
(Sonora Smart Dodd ) திருமதி.டோட் அதுமட்டுமல்ல,தமக்காக வாழாமல் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து மறைந்த தியாக சீலரான தம் தந்தையை கெளரவிக்கவேண்டும் என்று எண்ணினார்.
அந்தக் கெளரவமும் தம் தந்தையோடு நின்றுவிடாமல் தந்தையர்ஒவ்வொருவருக்கும் அந்தக் கெளரவிப்பு கிடைக்க வேண்டும் என்றும் திருமதி.டோட் கருதினார்.

சுய நலத்தோடு கலந்த அவரின் பொதுநலம் தம் தந்தை பிறந்த ஜூன் 19ம் தேதியை தந்தையர் தினமாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை 1909ம் ஆண்டு எழுப்பினார். அவரின்கோரிக்கைக் கரு மெல்ல உருப் பெற்று 5வருடங்கள் கழித்து 1924ல் அதிகார வர்க்கத்தின்செவிகளில் விழுந்தது. அமெரிக்காவின் அன்றைய அதிபர் கால்வின், திருமதி.டோட்டின்யோசனையை நான் ஆதரிக்கிறேன் என்றார். 1926ல் நியூயார்க் நகரில் தேசிய தந்தையர் தினக்கமிட்டி அமைக்கப்பட்டு அதன் சாத்தியம் பற்றி ஆராய்ந்தது. அதன் பின் அந்த விசயம் கிடப்பில்போடப்பட்டுவிட்டது.
அதற்கும் 30 வருடங்கள் கழித்து 1956ல் கோரிக்கை தூசி தட்டப்பட்டுதந்தையர் தினத்தை அங்கீகரித்து அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வந்தது.

அதன் பிறகும் அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து அறிவிக்கவில்லை. 1966ம் ஆண்டு அமெரிக்கஅதிபர் ஜான்சன் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமையை "தந்தையர் தினம்" என அறிவிக்கலாம்என சட்ட முன்வடிவில் கையொப்பமிட்டார். அதற்குப் பத்து வருடங்கள் கழித்து ஆட்சிப்பொறுப்பைஏற்ற அதிபர் ரிச்சர்ட் நிக்சன் 1972ல் அதிகாரப்பூர்வமாக தேசிய அளவில் "தந்தையர் தினம்" அனுசரிக்கஆணை பிறப்பித்தார். தனது கோரிக்கைக் கனவு பலிக்காமல் போய்விட்டதே என்ற கவலையோடு இருந்த திருமதி.டோட், அவரின் கனவு நனவானபோது அதைப்பார்த்து சந்தோஷப்பட அவர்உயிரோடு இல்லை. ஆனால் இன்றைக்கு அமெரிக்காவில் மட்டுமல்ல பெரும்பாலான நாடுகள்"தந்தையர் தினம்" என்று உச்சரிக்கத் துவங்கியுள்ளதை அவரின் முயற்சிக்குக் கிடைத்தவெற்றி என்றே சொல்லலாம்.
ரோஜா...
தந்தையர் தினத்தில் மேலை நாடுகளில்அப்பாவுக்கு ஒரு சிவப்பு ரோஜாவைக் கொடுத்து வாழ்த்துவதும், பிள்ளைகள் சிவப்புரோஜாவை தங்கள்சட்டையில் அல்லது தலையில் செருகிக்கொள்வதையும் வழக்கில் கொண்டுள்ளனர்!
அப்பா இயற்கை எய்திவிட்டால் தங்கள் சட்டையில் ஒரு வெள்ளை ரோஜாவை செருகிக்கொள்வது வழக்கம்!

இவை எல்லாவற்றையும் விட அப்பா உங்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் தெரியுமா? ஏன் நேசிக்கிறேன் தெரியுமா? என்று சொல்லி ஆரத்தழுவுவது வழமையான பழக்கங்களுள் முக்கியமான ஒன்று!

எத்தனையோ இன்னல்கள் பட்டாலும் அதை வெளிக்காட்டாமல் துன்பத்தின் சாயல் தம் பிள்ளைகள் மீது படிந்துவிடாமல் அனைத்தையும் தம் தோளில் சுமந்தே கூன் விழுந்து போன தந்தையர்கள்! இராத்தூக்கம் பகல்தூக்கம் இன்றி வளர்த்து வாலிபமாக்க எவ்வளவு தியாகங்கள் புரிந்த, புரியும் தந்தையர்கள்!
தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் சேரன் மகன் தந்தைக்காற்றும் கடனை மிகச்சிறப்பாகச் சொல்லியிருப்பார்! கொஞ்சம் சிந்தனைகளை ஓடவிட்டுப்பாருங்கள்! வாழ்க்கையில் ஒவ்வொரு தந்தையும் தன்னை ஆளாக்க பட்ட துயரங்கள் கொஞ்சமாவது உங்கள் கண்களைக் கலங்கவைக்கும்!
நீங்கள் இன்றைக்கு இருக்கும் நிலையை எண்ணிப்பாருங்கள்; நாளை இந்தச் சமுதாயம் உங்களைக் குறிப்பிடும்போது என்ன சொல்லும்? என்பதை அய்யன் வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வெகு நேர்த்தியாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்.
"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி,"இவன் தந்தை
என் நோற்றான்கொல்" எனும் சொல்!
இந் நாளில் நம் தந்தையரை நாமும் இதயசுத்தியோடு அல்லவை மறந்து நல்லவை எண்ணி வாழ்த்துவோம்! வணங்குவோம்!! அவர் மனம் மகிழ அன்றுமட்டுமாவது நேரம் ஒதுக்கி தந்தையோடு நேரத்தைச் செலவிடுவோம்!
கடந்த ஆண்டு அமெரிக்காவில் அன்னையர் தினத்தன்று 150மில்லியன் வாழ்த்தட்டைகள் விற்பனையானது; தந்தையர் தினத்தில் 95 மில்லியன் வாழ்த்தட்டைகள்! அன்னையர் தினத்தில் அன்னையர்களை வாழ்த்திய தொலைபேசி அழைப்புகள் 150 மில்லியன்! தந்தையர் தினத்தில் 140 மில்லியன்!அன்னையர் தினத்தில் அன்னையர் விரும்பும் துணிகள் பரிசுபொருட்களாகவும், தந்தையர்க்கு பரிசுப் பொருளாக "டை" யையும் அளித்திருக்கின்றனர்! அன்று விற்பனையான டைகள் எட்டு மில்லியன்! தந்தையர் தினத்தில் 23 விழுக்காடு தந்தையர்கள் உணவுவிடுதிகளுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்து மகிழ்வித்ததாக புள்ளிவிபரங்கள் புள்ளிபோடுகின்றன!

உலகத் தந்தை :- தந்தையர் தினம் கொண்டாடும் இந்த நாளில் மிக அதிகமான குழந்தைகளைப்பெற்ற தந்தையைப் பற்றி நாம் அறிந்து கொள்வோமா? சிலி நாட்டைச் சேர்ந்தவர் ஜெரோடோ. இவருக்கு வயது 65. இவரது மனைவி ஜூடி. இவருக்கு வயது 60. இந்தத் தம்பதியருக்கு எத்தனை குழந்தைகள் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள்கற்பனை உயரத்துக்கு எட்டாத குழந்தைகளைப் பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றதம்பதிகள் இவர்கள்! இவர்களூக்கு ஆணும் பெண்ணுமாகப் பிறந்தவர்கள் 64 பேர்கள்!!!!
இதில் உயிரோடு இருந்து, "தந்தையர் தின" வாழ்த்துச் சொல்வோர் மட்டும் 61 பேர்கள்!!!அடேங்கப்பா!? என்கிறீர்களா? இதற்கே வாய் பிளந்தால் எப்படி? இன்னொரு விசயம் சொன்னாஅடேங்கம்மா...! என்பீர்களே.

ஆம்! திருமணமான 12 வயதிலிருந்தே, எல்லாம் அவன் செயல் என்று பெற்றுத் தள்ள ஆரம்பித்த ஜூடி,இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்பதுதான் அது! பதினாறும் பெற்று பெருக வாழவாழ்த்தியவர்களின் வாழ்த்து தவறாக "சிக்ஸ்டி" என்று இவர்கள் காதில் விழுந்துவிட்டதோஎன்னவோ!?
நண்பர்களோட ஒரு சினிமாவுக்குப் போகலாம்ணு போயிருந்தேன்.

வலையில் சிக்கிய புள்ளிவிபரம்:-


அது குழந்தைகள் விரும்பிப் பாக்குற ஒரு படம்.அங்க ஒரு நீண்ட கியூவா, ஸ்கூல் பிள்ளைகள் வரிசையா நிற்க ஒருத்தர்,ஏய், ஒழுங்கா நில்லு, இங்க வா... அப்டி இப்டின்ணு சொல்லிக்கிட்டு இருந்தார். அங்க நின்னுக்கிட்டு இஇருந்த பிள்ளைகளை பத்து...பதினொன்ணுன்னு எண்ணிக்கொண்டிருந்தார்.எதோ ஒரு சிறுவனையோ இல்ல ஒரு சிறுமியையோ கணக்கு கொறைஞ்சுது போல இருக்கு.திருப்பித் திருப்பி எண்ணிக்கிட்டு இருந்தார்.நான் கேட்டேன், என்ன ஸார் இவ்வளவு பிள்ளைகளை அழைச்சிட்டு வந்திருக்கீங்க, துணைக்கு இன்னும் ஒரு ஆசிரியரையாவது கூட்டீட்டு வந்திருக்கலாமேன்னேன்! அவரு என்னை ஒரு மாதிரி பார்த்தார். அப்புறமா ஒரு அசட்டுச் சிரிப்போட இதெல்லாம் என்னோட குழந்தைகள்ங்கிறார்.....!?

Thursday, May 31, 2007

<> கடைசிவரை...<>

கடைசிவரை...
உன்னை என் உதடுகள்
ஒவ்வொரு
முறையும் முத்தமிட்ட போது,
மொத்தமாய் இன்பம்
என எண்ணினேன்!
நான்உன்னைச்

சுவைக்கும்
ஒவ்வொரு
முறையும்நீ,
என் கண் முன்னே
உதிர்த்தசாம்பல்....
நீயும்
இப்படித்தான்
சாம்பலாகப் போகிறாய்
என்றுணர்த்தினாய்!

நான் தான்
அதைஉணராது போனேன்!?
இழுக்க இழுக்க இன்பம் தானே

என்று தான்எண்ணினேன்...

இழுக்க, இழுக்க
என்ஆயுளைக்
குறைத்துக்கொண்டிருக்கிறாய்
என்பதை
அறியாமற் போனேன்!?

என்விரல்கள்
சுட்டபோது கூட
உனைப் பிரிய
மனமில்லாதிருந்தேன்..."

நீ "விரைவில்
சுடுகாட்டில்
சுட்டெரிக்கப்படுவாய்
என்றுணர்த்தினாய்
என்பதை
மட்டும்
கடைசிவரைநான்
அறிந்திருக்கவே இல்லை!?

<>"வெல்ல உயிரை வெல்லத் துடிக்கும்....."<>



இன்று உலக புகையிலை
இல்லா தினம்!



புகையிலை...புகை இல்லை..என்று புகையிலையை வெவ்வேறுவடிவங்களில் உபயோகிப்பவர்கள் சொல்லி அந்தப்பழக்கத்திலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக்

கொள்ளும் ஒப்பற்ற உறுதிமொழியைத் தாங்களுக்குத்

தாங்களே வாசித்து நிறைவேற்ற இன்று உகந்த நாள்!


"உலக புகை இல்லா சுற்றுச்சூழல்" என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த நாள் புகை பிடிப்போர் சிந்தனை செய்யவேண்டிய நாள்!உலகில் 67 விழுக்காட்டினர் இந்த புகையிலை என்னும் கொடிய நச்சை சுவைத்தும் சுவாசித்தும் தங்கள் சுவாசத்தை குறைத்துக்கொள்ள போட்டிபோடுகிறார்கள்!இந்தியாவில் 56 சதவீத ஆண்கள் புகையிலையை உபயோகிக்கின்றனர். கிராமப்புறங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.

இளைஞர்களில் 40 சதவீதம் பேர் இக் கொடிய பழக்கத்திற்கு ஆட்பட்டுள்ளனர்.

இந்திய மக்கள்தொகையில் 20 கோடி ஆண்களும் 5 கோடி பெண்களும் புகையிலையைப் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
புகையிலைப் பழக்கம் என்பது புகையிலையை வெற்றிலையோடு மடித்துச் சுவைக்கவும், அதில் சில வேதிபொருட்களைக் கலந்து இனிப்பு புகையிலையை வாயில் போட்டு குதப்பிக்கொள்ளவும், பீடி, சிகரெட், பான் மசாலா, மூக்குப்பொடி என பல பெயர்களைப் பெற்று விளங்குகிறது. புகையிலையில் 4,000 வேதியியல் பொருள்கள் உள்ளன. அவற்றில் 55-க்கும் மேற்பட்டவை புற்றுநோய் உருவாக்கும் காரணிகள் என கண்டறியப்பட்டுள்ளன.

நுரையீரலில் வரும் 90 சதவீத புற்றுநோய்க்குப் புகையிலையே காரணம். வாய், நாக்கு, உணவுக்குழாய், கருப்பை, மூத்திரப்பை, வயிறு, சிறுநீரகம் எனத் தலை முதல் கால் வரை உள்ள முக்கிய உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது.

புற்றுநோய் மட்டுமின்றி இதயத்தில் மாரடைப்பு, நுரையீரலில் ஏற்படும் தீராத சளி, கால்களில் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துவது, ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுத்துவது என பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

புகையிலைப் பழக்கம் உள்ளவர்களுக்கு வாயில் ஏற்படும் தீராத புண், வெள்ளை தழும்பு, சிகப்பு தழும்பு போன்ற வடுக்கள் உடம்பைப் பாழ்படுத்துகின்ற நிலை ஏற்படுகிறது.


பணம் கொழிக்கும் புகையிலைத் தொழில்!

அமெரிக்காவின் தென் மாநிலங்களில் சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பண்ணைகளில் புகையிலை சாகுபடி செய்யப்படுகின்றது. அநேகமாக, புகையிலை பயிரிடும் விவசாயிகள், புகையிலையை பணப்பயிராகக் கருதியே வளர்க்கின்றனர். அமெரிக்க அரசின்

விவசாயத் துறை, புகையிலைப் பயிரை ஒரு முக்கியமான பணப்பயிராகக் கருதி ஒருபுறம் சலுகைகளை வாரி வழங்குகிறது. காரணம், நீண்ட நெடிய விவசாய வரலாற்றில் தொடர்ந்து நாட்டின் ஏழாவது பணப்பயிராக புகையிலை இருப்பதும், ஏற்றுமதி செய்யக்
கூடிய பணப்பயிரில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றி
ருப்பதும்தான்! அதுமட்டுமல்ல, அமெரிக்க சிகரெட், சுருட்டு தயாரிப்பாளர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தில் மிக
முக்கியமான பிரதான இடத்தைப் பெற்றிருப்பதும், அவர்களின்
உள் மற்றும் வெளிநாட்டு சந்தையை தரத்தோடு நிர்வகித்து கோடிக்கணக்கில் இலாபகரமான தொழிலாகவும் செய்துவரு
வதுதான்!

புகையிலை பிறந்ததும் வளர்ந்ததும்...

அமெரிக்காவைப் பொறுத்தவரை 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் புகைப்பிடிக்கும் கலாச்சாரம் முளைத்ததாகத் வரலாற்றுப் பக்கங்கள் தெரிவிக்கிறது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்த 1492களில் காய்ந்த புகையிலைச் செடியைச் சுருட்டிப் புகைப்பிடித்ததைத் தன் பயணக் குறிப்பில் தெரிவித்திருக்கின்றார். 1586ல் பிரிட்டனில் சர் வால்ட்டர் ராலே புகைப்பிடிக்க புகைக்குழாயைக் கண்டறிந்து அறிமுகப்படுத்தினார். 1881ல் சிகரெட் என்ற முதல் தயாரிப்பை இயந்திரத்தில் தயாரித்து அறிமுகப்படுத்திய பெருமை(!) அமெரிக்காவுக்கு உண்டு.

தடைகளை மீறி....

புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு மிகக் கேடு என்ற புரிந்துணர்வை ஏற்படுத்த புகைப்பழக்கத்திற்கெதிரான இயக்கங்கள், புகைப்பிடிக்காதவர்களைக் கொண்டு புகையில்லாச் சுற்றுச்சூழலை ஏற்படுத்தலின் அவசியம், புகைப்பிடித்தலால் ஏற்படும் தீமைகளை வெளிப்படுத்தும் துண்டுப்பிரசுரங்கள் வினியோகித்தல், சிகரெட் அட்டைப்பெட்டியின் மேல் எச்சரிக்கை வாசகங்களைப் பொறிக்கவைத்தல், பொது இடங்களில் அல்லது பணியிடங்களில் சிகரெட் பிடிப்பதைத் தடைசெய்தல், வயதுக்குவராதவர்களுக்கு சிகரெட் விற்பனைசெய்தல் கூடாது போன்ற எண்ணற்ற தடைகளையும் மீறி புகைப்பிடிப்பதால் ஆண்டுக்கு 400,000 பேர் பலியாவதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

புகைச் சகதி என்ற புதைச் சேறில்....

புகைப்பிடித்தல் என்பது சிறுபிராயத்திலிருந்தே துவங்கிவிடுகின்ற பேராபத்தாகத்தான் உணரமுடிகிறது. ஒவ்வொரு நாளும் மூவாயிரம் அமெரிக்க இளையர்கள் இந்தப் பழக்கத்திற்கு ஆட்படுகின்றதாகவும் புகைப் பிடிக்கத் துவங்கும் பத்துக்கு ஏழு பேர் விட்டுவிடலாம் என்று எண்ணினாலும் அவர்களால் விடமுடியாத பழக்கமாக மாறி அவர்களை உடனிருந்து கொல்லும் நோயாக தொற்றிக் கொள்வதாக ஆய்வுகள் அமர்க்களமாகச் சொல்லுகிறது. பெரும்பாலான விடலைப் பருவத்தினர் புகைப்பிடிப்பதை ஒரு வீரதீரச் செயலாக எண்ணிக் கற்றுக்கொண்டு பின்னர் அதற்கு அடிமைப் பட்டுப்போகின்றதும் அப்படிக் கற்றுகொண்ட பேர்வழிகள், தான்பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம் என்ற பரந்த மனத்தோடு (!) தங்கள் வழிக்கு ஒத்து வராத அப்பாவிகளை பலவந்தமாகவும், அவர்களின் பலவீனங்களைக் காட்டியே இந்தப் புகைச் சகதி என்ற புதை சேற்றில் சிக்க வைக்கும் அவலமே நிகழ்வதாக சோகத்தோடு ஒரு செய்தி முன்னுரைக்கிறது.

தங்களைத் தாங்களே அழித்து...

பெற்றோர்களைப் பார்த்துத் தடம் மாறும் பிள்ளைகளும், சின்னஞ்சிறுசில் சிகரெட் குடித்துச் செத்தோர் உண்டா? தைரியமாக நீ, பிடி என்று புகைப்பழக்கத்தோடு உடன்பாடு செய்துகொள்கின்ற சிறார்களுக்குப் பின் விளைவுகள் அப்போது தெரிவதில்லை; பழகிவிட்ட பெரியவர்களோ, நிகோடின் என்ற நச்சுத் தேவதையை மரணம் தொடும் வரை விட்டொழிக்கத் தெரிவதில்லை. இன்னும் சில மங்கையர்கள் திலகங்களோ புகைப்பிடித்தால் குண்டாகமாட்டோம் என்று குருட்டுத்தனமான நம்பிக்கைகளுக்கு ஆளாகி தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளுகின்ற ஆரவாரங்களும் துணுக்குச் செய்தியாய் பவனி வருகிறது.

அக்கறையுள்ள அரசுகள்....

பிரான்சு தேசம் சிகரெட் குறித்து எந்த விளம்பரமும் செய்யக் கூடாது என்று தடைசெய்து அறிவித்துள்ளது.ஐரோப்பிய நாடுகள் முழுவதுமே புகைப்பிடித்தலுக்கெதிரான சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. 1971லிருந்து பிரிட்டன் சிகரெட் பெட்டியில் சிகரெட் குடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று அறிவிப்பை வெளியிட்டுத்தான் சிகரெட்டை விற்கவேண்டும் என்று சட்டம் இயற்றியுள்ளது. இத்தாலி பொது இடங்களில் புகைப்பிடித்தலைத் தடை செய்துள்ளது.

நச்சு நாகம் நிகோடின்....

அப்படி என்னதான் இந்தச் சிகரெட்டில் இருக்கிறது? மனிதனை மரணத்தின் வாயிலில் தள்ள அத்தனை வலிமையா? இந்தச் சாதாரணச்சிகரெட்டுக்கு?!அடாடா, என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல? ஒராயிரமா, ஈராயிரமா? நாலாயிரம் நச்சு மறைந்துள்ள நாகம் அது என்றால், மிகையல்ல;
கார்பன் மோனாக்சைடு, ·பார்மல்டிஹைடி(formaldehyde), அம்மோனியா, கார்பண்டை ஆக்சைடு, அலுமினியம், காப்பர், லெட், மெர்குரி, துத்தநாகம் உட்பட அனேக நச்சு உலோகக் கலவைகள் இதில் பொதிந்துள்ளது.

நச்சு விளம்பரங்களுக்கு....

இவ்வளவு நச்சு இருக்கிறது என்று அறிந்தும் இதைச் சுவாசிக்க யாராவது மனமொப்புவார்களா? அமெரிக்காவில் இறக்கும் ஆறில் ஒருவர் புகைப்பிடிப்பதால் என்பது நீக்கமற அறிந்த உண்மை. ஒவ்வொரு வருடமும் 1.5 மில்லியன் அமெரிக்கர் புகைப்பிடிப்பதை நிறுத்திவிடுகின்றனர். கேட்கவே இனிமையாக இருக்கிறதே, என்கிறீர்களா? அவசரப்படாதீர்கள். அடுத்த அதிர்ச்சியை நான்சொல்கிறேன். 50 மில்லியன் புதிய புகைப்பாளர்கள் உருவாகிவிடுகிறார்களே!

புகைபிடிப்பாளிகளை கவர்ந்திழுத்து புகைக்க வைக்க, நான், நீயென்று பன்னாட்டு சிகரெட் நிறுவனங்கள் ஒவ்வொரு நிமிடத்திற்கும் செலவழிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? 5,000 டாலர்கள்!
கவர்ச்சி விளம்பரத்துக்குப் பலியாகி, சிகரெட் மோகத்திற்கு அடிமையாகித் தங்களையே சிதைத்துக் கொள்ளும் மனிதர்கள் தங்கள் உடற் கேட்டிற்குச் செலவழிக்கும் தொகை வருடத்திற்கு 65 பில்லியன் டாலர்கள்...ஏ...அப்பா என்று வாய் பிளக்க வைக்கிறதா?
வியாதிகள் பலவிதம்....

நுரையீரல் வியாதி, நுரையீரல் புற்று நோய்(85சதம் குணப்படுத்த இயலாதது என்பது குறிப்பிடத்தக்கது), மூக்கடைப்பு, மூக்கு, தொண்டை சிவந்தும் தடித்தும் ஏற்படும் நோய் உட்பட பெயர் வாயில் நுழையா நோய்கள் 80 முதல் 90 சதம் நோய் புகையுறிஞ்சுவதால் மட்டுமே வருகிறது.

சிகரெட் புகைப்பவர்களில் முப்பது விழுக்காடு இதய நோய் பாதிப்பால் விழுந்து அல்லலுறுகின்றனர். சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு என்ற நச்சுதான் இதற்கு முழு முதற்காரணம். உறிஞ்சுகின்ற புகை இதயத்திலிருந்து இரத்தத்தை உடலெங்கும் எடுத்துச் செல்கிற இரத்தக் குழாய்ச் சுவரின் உட்பகுதியை தடிமனாக்கிவிடுகிறது. இதனால் இரத்த ஓட்டம் சீராகச் சென்றடைய முடியாமற் பிரளயத்தை ஏற்படுத்தி மரணத்தின் அழைப்பு மணியை அடிநாதமாய் ஒலிக்க வைக்கின்றது.

நிகோடின் என்ற நச்சு, இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, பிராணவாயுத் தகராறு என்று மெல்லக் கொல்லுகின்ற பேராபத்துக்கு அடித்தளமிடுகிறது.புகையுறிஞ்சல் அதிகரிக்கும்போது நெஞ்சுவலியும் திடீர் மாரடைப்பும் ஏற்படுகின்ற கொடூரம் நிகழும்.
இரத்தம் உறை நிலை (Blood clots) என்பது புகைப் பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கு எளிதில் ஏற்படுகின்ற வாய்ப்பு அதிகமுண்டு.

புற்றுநோய்...ஒருவர் புகைப்பதால்உதடு, நாக்கு, வாய், உமிழ் நீர்ச் சுரப்பிகள்(salivary glands), மூச்சுக்குழலின் மேற்பகுதி(larynx), தொண்டையிலிருந்து வயிற்றுக்கு உணவை எடுத்துச் செல்லும் குழாய் (esophagus) மற்றும் அதன் நடு இறுதிப் பகுதி புற்று நோய் தோன்றும் பகுதிகளாகும்.வயிற்றுப் புற்று நோய், சிறுநீரகப் புற்றுநோய், அறிகுறி தென்பட்டாலே அது புகையுறிஞ்சியால் வந்த வினை என்று தெரிந்துகொள்ளலாம். புகையுறிஞ்சலுக்கும் லுக்கேமியா என்ற வியாதிக்கும் மிகுந்த தொடர்புள்ளது.

பெண்களுக்கு...
புகைப்பழக்கமில்லாத பெண்ணை விட, புகையுறிஞ்சும் பெண்ணுக்கு 5 வருடங்களுக்கு முன்பாகவே மாதவிலக்கு நின்றுவிடும் அபாயம் ஏற்படும். புகையுறிஞ்சும் பழக்கமுள்ள பெண்களுக்கு நிகோடின் நச்சு ஹார்மோன்கள் சுரப்பிகளைச் செயலிழக்க வைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது. எலும்பு உறுதியற்ற அல்லது எளிதில் உடைந்துவிடுகின்ற தனமையையும் (osteoporosis) ஏற்படுத்தும்.
கொடிது கொடிதுஅடுத்தவர் ஊதும் புகையைச் சுவாசிப்பது....
நான் புகைப்பிடிக்கும் பழக்கமில்லதவன் என்று மார்தட்டிக் கொள்ளுபவர்களே! நீங்கள் கூட புகைப்பிடிப்பவரிடமிருந்து விலகி இருக்காவிடில் பிறர் ஊதித்தள்ளும் புகையை நீங்கள் சுவாசிக்க நேரும் சந்தர்ப்பங்கள் அதிகமானால் உங்களையும் நோய் நெருங்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயம்.

புகைப்பழக்கமில்லாத, ஆனால் பிறர் விடும் புகையை உள்ளிழுத்துக் கொண்டவர்களைச் சாவு அரவணைத்துக் கொண்டோரின் எண்ணிக்கை வருடந்தோறும் அமெரிக்காவில் 53,000 பேர்! இதில் மிக மோசமான கார்டியோவாஸ்குலர் நோய் தாக்கியிருந்ததாக அறியப்பட்டோர் மட்டும் 37,000 பேர்!!

புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு எவ்வளவு கெடுதல்களை ஏற்படுத்துமோ, அதைவிடக் கொடிது அவர்கள் ஊதித்தள்ளும் புகையை சுவாசிப்பதும் உறிஞ்சுவதும் ஆகும்.

வீட்டில் புகையை ஊதித்தள்ளுவதால், கைக்குழந்தைகளும், சிறார்களும் அந்தப் புகையால் அவர்களின் இளந் திசுக்களும் சீர்கெடுவதோடு, அவர்களும் பலவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும்.
ஒவ்வொருவருடமும் அடுத்தவர் ஊதித்தள்ளும் புகைக்குப் பலியாகிறவர்கள் நியூ மெக்சிக்கோவில் மட்டும் 2,000 பேர் என்பது அமெரிக்க மாநிலங்களிலேயே மிக அதிகமாகும்!

வல்லமை படைத்த இனிய விரோதி....

நிகோடின் நஞ்சு வயோதிகத்தை வரவழைக்கும் வித்தைக்காரன். இரவுத் தூக்கத்தை குறைக்கும் மாபெரும் அரக்கன் இந்த நிகோடின். உண்ட உணவு செரித்துவிடக்கூடாது என்பதில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளும் சுய நலவாதி! அடுத்தவர் உறக்கத்தை உண்டு இல்லையென்று செய்துவிடும் குறட்டையைப் பரிசாகத் தந்திடும் இனிய விரோதி! புகை உங்கள் இனிய குரலை கரடுமுரடாக மாற்றிச் சாகசம் செய்ய வைக்கும்! அதிலும் பெண்கள் குரலை ஆண் குரலுக்கு இணையாக மாற்றி அற்புதச் சாதனை படைக்க வல்லது! புகைப்பிடிக்கும் பெண்களுக்கு, புகைபிடிக்காதவர்களை விட 7 மடங்கு முகத்தில் முடி வளருகின்ற அரிய வாய்ப்பை வழங்கும் வல்லமை படைத்தது.

இன்றைக்கு, புகையுறிஞ்சுவதும், புகையிலையை மென்று உள்ளே தள்ளுவதும் எவ்வளவு உயிராபத்து என்று அறிந்து கொள்ளுகின்ற வாய்ப்பை உலகில் அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அளப்பறிய பணியாற்றி வருவதை அறியும் போது மனதிற்கு ஆறுதலளிப்பதாக இருக்கின்றது.

வெல்ல உயிரை வெல்லத் துடிக்கும்.....புகை பிடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஆண்டொன்றுக்கு 400,000 உயிர்ப் பலிகளை நிகழ்த்தும் எமனாக சிகரெட் அமெரிக்காவில் உள்ளது என்பது எந்தக் கலப்புமில்லா உண்மை. அதாவது ஒவ்வொருநாளும் 1,100 பேர் பலியாகின்றனர்.

புகைப்பிடிப்பவர்களிடம் ஒரு கேள்வியை முன் வைக்கலாம். ஒவ்வொரு நாளும் விமான விபத்தில் 1,100 பேர் விழுந்து செத்துப் போகிறார்கள் என்றால் யாராவது விமானப் பயணத்துக்கு உடன்படுவார்களா? அதைப் பிடிப்பதால் மரணம் நிச்சயம் என்று நிர்ணயிக்கப்பட்ட நிதர்சனமான உண்மை! பிடித்ததைப் பிடிக்காமல் செய்யுங்கள்; உங்களை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டுள்ளதை கண்காணாத தூரத்திற்கு தூக்கி வீசுங்கள்; நல்ல காற்றைச் சுவாசிக்க உங்கள் சுவாசப் பைகளுக்கு சுதந்திரம் கொடுங்கள். உங்கள் கை விரலிடுக்கில் தப்பித் தவறி நுழைந்துவிடாமற் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு; புகை வலையங்களுக்குள் சிக்கிக் கொள்வதில்லை என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டால் உங்கள் வெல்ல உயிரை வெல்லத் துடிக்கும் எமனிடமிருந்து விலகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

வாழ்க்கை வாழ்வதற்கே, வீழ்வதற்கல்ல என்று நிரூபியுங்கள். குறைந்தபட்சம் இந்த ஒரு நாளாவது புகைப்பிடிக்கும் பழக்கத்தைஒத்திவைக்க யாரேனும் தயாராக இருக்கிறீர்களா? இந்தக் கட்டுரையைப் படித்து ஒருவராவது புகைப்பிடிப்பதை நிறுத்தினால் அதுவே ஒரு துவக்க வெற்றி என்று கருதலாம்! புகையிலை, புகைப்பழக்கம், புகையிலை உற்பத்தி, புகையிலை தரும் நோய் குறித்து அறிந்து நம்மால் ஒருவரை புகைப்பிடிப்பதிலிருந்து நிறுத்த இயலுமெனில் செய்வோமே!!

புகைப்பிடிப்போர் எப்படி அதை நிறுத்துவது என்பதை அறிய இந்த இணையத்தளம் சென்று பாருங்கள்!

http://www.smokefreelife.com/gclid=CJTkwZrwuIwCFQlQWAodBztKSg

*****************

Wednesday, May 09, 2007

<0> "அன்னையர் தினம்"<0>

"அன்னையர் தினம்"


















"தாயிற்சிறந்த கோவிலுமில்லை....." என்ற வைரவரிகள் தமிழ் கூறும் நல்லுலகில் பவனி வரும் இரத்தினச சுருக்கமான வார்த்தை. ஒரு சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக..இப்படிப் பெண் தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்கிற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது; இப்படிப்பட்ட அன்னையைக் கெளரவிக்கும் வகையில் தற்போது உலகெங்கும் "அன்னையர் தினம் " அகிலமெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்தவர் பற்றி நாம் சற்றுத் தெரிந்து கொள்வோமா? எந்தச் செய்திக்கும் ஒரு மூலம் இருக்குமில்லையா? அந்த வகையில் அன்னையர் தினம் முகிழ்க்கக் காரணகர்த்தாவாக இருந்தவரை அறிவது சற்றுப் பொருத்தமாக இருக்கும் இல்லையா?

அன்னையர் தினம் தான் பழங்காலத்தில் தாய்க் கடவுளுக்கு வசந்தவிழாவாகக் கொண்டாடப்பெற்றதாகவரலாற்று ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர். அன்றைய கிரேக்கப் பேரரசன் ரோனஸ்(Cronus) மனைவியும் கடவுளின் அன்னையாகவும் மக்களால் வணங்கப்பெற்ற ரேயா (Rhea) வுக்கு விழாவெடுத்தான். மக்கள் இந்தவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடினர்.
இதே காலகட்டத்தில், அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பாக ரோமப் பேரரசில் கடவுளின் அன்னையாகக் கருதி வணங்கப்பெற்ற சைப்ளி(Cybele)க்கு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பெற்ற வரலாறும் உண்டு. மூன்று நாட்கள் கொண்டாடப்பட்ட இந்தப் பெருவிழாவிற்கு ஹிலாரியா(Hilaria) விழா என்றும் மார்ச் மாதத்தில் 15 முதல் 18ம் தேதி வரை என்று ஆண்டுதோறும் கொண்டாடியதற்கான சான்றுகள் உள்ளன.

16ம் நூற்றாண்டில் கிரீஸ் நாட்டில்தான் "MOTHERING SUNDAY" என்ற நாள் முதன்முதலாக அனுசரிக்கப்பட்டிருக்கிறது. ஈஸ்ட்டர் வரும் மாதத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமை இயேசுவின் தாயை நினைவு கூறும் வகையில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் முகிழ்த்த அன்னையர் தினம்தான் இன்றைக்கு உலகெங்கும் கொண்டாடக் காரணமாக அமைந்தது எனலாம்.
1600களில் இங்கிலாந்தில் இடம்விட்டு இடம்பெயர்ந்து வேலைசெய்து வந்தனர். இவர்கள் தாங்கள் வேலை செய்யும் எஜமானர்கள் எங்குவேலை செய்யச் சொல்லுகிறார்களோ அங்கேயே தங்கி வேலை பார்ப்பதும், குடும்பத்தை ஓரிடத்திலுமாய் வைத்துவிட்டுச் செல்லுவதையும் வழக்கமாய்க் கொண்டிருந்தனர்.
அப்படி வேலையில் இருப்பவர்களுக்கு வருடாந்திர விடுமுறை போல இந்த மதரிங் சண்டேக்கு விடுப்பு அளித்து எஜமானர்கள் அனுப்புவது வழக்கம். அப்படிச் செல்லுபவர்கள் ஒருவித விசேசமான கேக் ( அதையும் மதரிங் கேக் என்றே குறிப்பிட்டார்கள்.) தயாரித்தோ அல்லது வங்கிச்சென்றோ தமது அன்னையரோடு விடுமுறையைக் கழித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் அன்னையர் தினம் கொண்டாடப்படவேண்டும் என்று 1872ல் ஜூலியா வார்டு ஹோவ் (Julia Ward Howe )முதன் முதலில் பாஸ்டனில் ஒரு பெருந்திரளான கூட்டத்தைக் கூட்டினார். திருமதி ஹோவ், குடும்பத்தில் அயராது உழைக்கும் அன்னைக்கு ஒருநாளை அமைதியாகக் கழிக்க அன்னையர் தினம் என்று ஒருநாளை அனுசரிக்க வேண்டும் என்று அக் கூட்டத்தில் பெருங்குரலெடுத்துக் கூறினாலும் அவருக்குப் பின் அதை எடுத்துச் செல்ல யாரும் முன்வரவில்லை.
"அன்னா மரியா ரீவிஸ் ஜார்விஸ்" என்ற பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வர்ஜினியா மாநிலத்தில் கிரா·ப்டன் (GRAFTON) என்ற கிராமத்தில் வாழ்ந்தவர்.
இவர் கிறிஸ்தவ பாதிரியார் அருட்திரு.ரீவிஸ் மகளாவார். 1852ல் அன்னா, கிரான்வில்லி இ ஜார்விஸ் என்பாரை மணம் புரிந்து மேற்கு வர்ஜீனியாவின் பிலிப்பியிலிருந்து கிராப்டனில் குடியேறினார். பணிபுரியும் பெண்களுக்கான நலச் சங்கங்களை துவக்கினார்; பணிபுரியும் பெண்கள் டி.பி.நோயால் பாதிக்கப்பட்ட போது அவர்களுடைய குடும்பங்களில் உதவி செய்ய இந்தச் சங்கங்கள் பணிப்பெண்களை வேலைக்கமர்த்தி உதவி செய்தது.
பாட்டிலில் வினியோகிக்கப்படும் பால் மற்றும் உணவு வகைகளை பரிசோதித்து அளிக்கும் பொறுப்பையும் இந்தச் சங்கம் ஏற்றுக்கொண்டு ஆற்றிய சேவைகளைக் கண்ட அண்டை நகரங்களான ·பெட்டர்மேன், ப்ருண்ட்டிடவுன் பிலிப்பி, மற்றும் வெப்ஸ்டர் போன்ற நகரங்களும் சங்கங்களை துவக்கிட விருப்பம் தெரிவிக்க அன்னா சுகாதரக் குறைவான சுற்றுச்சூழற் கேடுகள் மறைய அங்கெல்லாம் சென்று வழிநடத்தினார். தன்னுடைய குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்துபோக நேரிட்ட போதிலும் மனம் தளராது பணிபுரிந்தார்.
பால்டிமோர் நகரிலிருந்து ஒஹையோ வரையிலான இருப்புப்பாதை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது உள்நாட்டுக் கலகம் மூள இந்தச் சங்கங்களின் பணி இரட்டிப்பானது. யுத்தத்தில் காயம்பட்ட வீரர்களை சங்க கட்டிடத்தில் கொண்டுவந்து வைத்து மருந்திட்டு, உணவு,உடையளித்து காக்கும் பணியினை சங்கங்கள் மூலமாக அன்னா செய்தார்.

அன்று யுத்த களத்தில் அமெரிக்க வீரர்கள் பலியாயினர். அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து நாலாபக்கமும் சிதறிப்போயினர். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும் அவர்களின் நல்வாழ்க்கைக்கும் சமாதானத்திற்கும் அயராது பாடுபட்டவர்தான் "அன்னா ஜார்விஸ்". அவரின் பார்வையற்ற மகளுடன் தன் இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904ல் மறைந்தார். அவருடைய 72வது வயதைக் குறிக்கும் வகையில் பிலடெல்பியாவின் வெஸ்ட் லாரல் ஹில்லில் புதை(விதை)க்கப்பட்டபோது கிராப்டன் ஆன்ரூஸ் சர்ச்சில் 72 முறை ஆலய மணி ஒலித்தது! மகள் ஜார்விஸ் முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக உள்ளூரில் உள்ள மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1907ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார்.
1908ம் ஆண்டு மே 10ம்நாள் பிலடெல்பியா அரங்கில் 5,000 பேர் அமரக்கூடிய அரங்கில் 15,000 பேர்கள் திரண்ட கூட்டத்தில் ஒருமணிநேரம் பத்துநிமிடங்கள் ஜார்விஸ் அன்னையர் தின உரை நிகழ்த்தினார்! அதனைத் தொடர்ந்து அன்னையர் தினக் கமிட்டி ஒன்றை அங்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்! அந்த அமைப்பு உலக அளவில் இதன் நோக்கத்தை எடுத்துச் செல்லும் என்று அறிவித்தார்!
ஜார்விஸ் அம்மையார் எதிர்பார்த்ததைவிட 1909ம் ஆண்டே அமெரிக்காவின் 45 மாநிலங்களிலும் போர்ட்டோ ரிக்கோ, ஹாவாய், கனடா, மற்றும் மெக்சிகோவில் அன்னையர் தினத்தை விசேடப் பிரார்த்தனைகள் வெள்ளை மற்றும் சிவப்பு துணிகளை அணிந்து சிறப்பாகக் கொண்டாடினர்!

1910ம் ஆண்டு மேற்கு வர்ஜீனியா ஆளுநர் வில்லியம் இ கிளாஸ்காக் ஏப்ரல் 26ம்தேதி அன்னையர் தினமாக அறிவிப்பை வெளியிட்டார்!அமெரிக்க மாநிலங்களவை உறுப்பினர்களான அலபாமா ஹெ·ப்ளின், டெக்ஸாஸ் செப்பார்டு ஆகிய இருவரும் இணைந்து மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக அறிவிக்கக்கோரும் சட்ட முன்வடிவைச் சமர்ப்பித்தனர்!
1913ம் ஆண்டு தன் பணி நிமித்தம் மகள் ஜார்விஸ் பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியாவில் குடியேறினார். தாயார் விட்டுச்சென்ற சமூக சேவையை மகள் ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார்.
கஷ்ட்டப்படுகிற, வாழ்க்கையில் இன்னலும், சோதனைகளும் ஒருசேரத் தாக்கி மனம் வெந்து நொந்து சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கான அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப் பட வேண்டும்; எல்லோர் இல்லங்களிலும் அன்றையதினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் என்று எண்ணினார். தம் எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.

ஆனால், ஜார்விஸ் திருப்தி அடையவில்லை; ஆயிரக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் "அன்னையர் தினம்" கொண்டாடவும் அந்நாளை அரசின் விடுமுறை நாளாகவும் அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமென அமெரிக்க அதிபருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

1914ம் ஆண்டு அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன் வருடம்தோறும் மேமாதம் இரண்டாம் ஞாயிறை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதனையே கனடா அரசாங்கமும் ஏற்று அங்கீகரித்து அறிவித்தது. அதுமட்டுமல்ல ஆப்கானிஸ்தானத்திலிருந்து கோஸ்டாரிகா வரை 46 நாடுகள் இதே நாளில் "அன்னையர் தினம்" என அறிவித்து நடைமுறைப்படுத்தியது. ஜார்விஸ் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாலும் முழுமனநிறைவடையவில்லை; உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்திற்கு அடுத்த வித்தினை இட்டார்.

எதையும் வியாபாரமாக்கி பணம் பண்ணும் அமைப்பு "அன்னையர் தினம்" அன்று அன்னையின் படம் ஒன்றைப் பொறித்து கொடியொன்றை விற்று காசு....ஸாரி...டாலர்கள் பார்த்தது. வெகுண்டெழுந்தார் ஜார்விஸ்! 1923ம் ஆண்டு இத்தகைய கொடி விற்பனையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். என்னுடைய நோக்கம் அன்னையர் தினம்"செண்டிமெண்ட்" நாளாக இருக்கவேண்டுமேயல்லாமல் டாலர் தேற்றுகிற நாளாக இருக்கக்கூடாது. இத்தகைய வசூலுக்குத் தடைவித்திக்க வேண்டும் என்று வாதாடி வென்றார்.
உலகம் முழுக்க "அன்னையர் தினம்" அனுசரிக்கப்படவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று தனது 84வது வயதில் தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் தன்னைச் சந்தித்த நிருபர்களிடம் வெளிப்படுத்தினார். அவருடைய ஆசை இன்று அனேகமாக பூர்த்தியாகிவிட்டது என்றே சொல்லலாம்.


"ஒரு அன்னையின் அன்பு ஒவ்வொருநாளும் புதிதாகவே பூக்கும் என்ற ஜார்விஸ் இப்படிக் குறிப்பிடுகிறார். இந்தநாளில் நம்மைப் பெற்றெடுத்த தாய்க்கு இணையற்ற அன்பைப் பொழிய பிரத்யேகமான தீர்மானங்களை நமக்கு நாமே நிறைவேற்றி செயல்படுத்த வேண்டும்! இனிய வார்த்தைகள் மூலம், அன்பளிப்புகள் மூலம், நம் அபிமானத்தின் மூலம், இன்னும் எந்தெந்த வழிகளில் எல்லாம் நம் அன்பை வெளிப்படுத்துவதன் மூலம், அவளைச் சிறப்பியுங்கள்; அன்னையின் இதயம் சந்தோசத்தால் ஒவ்வொருநாளும் நிரம்பிவழியச் செய்யுங்கள்! குறிப்பாக அன்னையர் தினத்தன்று அவளை விசேடமாக கவனியுங்கள்! அன்னையின் அருகில் இல்லாத சூழலா, அடிக்கடி மடலிடுங்கள்! அதுமட்டுமல்ல அவளிடமுள்ள விசேட குணத்தைச் சுட்டிக்காட்டிஅவளை நீங்கள் எவ்வாறெல்லாம் நேசிக்கிறீர்கள் என்று உணர்த்துங்கள். ஈன்ற பொழுது மகிழ்ந்ததைக் காட்டிலும் அவளை உங்கள் செயல் மகிழ்விக்கச் செய்வதாக இருக்கவேண்டும் என்கிறார்!
"அன்னையர் தினம்" மூலம் தெரியாவிட்டாலும், இன்று அகிலம் அன்னையர் தினத்தை அவரவர் இஷ்ட்டத்துக்கு கொண்டாடி மகிழ்கின்ற நாளாகத் திகழ்கிறது. சிங்கப்பூரில் சீனிவாசப் பெருமாள் கோவிலில் மகாலட்சுமிக்கு விசேச வழிபாடு செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவது இந்த தினத்தில் இன்றும் நடைபெறுவதைக் காணலாம். தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் போல அன்னையர் தினத்தை வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள் என்று கொண்டாடத் தலைப்பட்டுவிட்டனர்.
கணினியில் தேடுபொறியில் ஆங்கிலத்தில் Mothers day என்று தேடினால் 20,000,000 வலைப்பக்கங்கள் பலவிதமான வியாபார நுணுக்கங்களோடு மிளிர்வதைக் காணலாம்; அன்னையரை வாழ்த்த பூங்கொத்து அனுப்ப! வாழ்த்து அட்டைகள்! அன்னையை அலங்கரிக்க எங்கள் வைர வைடூரிய நகைகளை வாங்கிட! கைக்கெடிகாரம், ஒப்பனைபொருட்கள் பெட்டி... உங்கள் அன்னையை மகிழ்விக்க எங்கள் பரிசுக் கூடைகளை இன்றே வாங்கி அனுப்புங்கள் என்று விதவிதமாக வலையக அங்காடிகள் வகைவகையாய் கண்களைப் பறிக்கும் வண்ணம் கடைவிரித்துள்ளனர்! அன்னையின் உருவப்படத்தைப் போட்டு வணிகம் செய்தவர்களுக்கெதிராக வழக்குத் தொடுத்து வெற்றிகண்ட ஜார்விஸ் அவர்களையும் இந்த நேரத்தில் எண்ணிப்பார்க்கிறோம்.

எகிப்து மற்றும் லெபனானில் மார்ச் 21ம்தேதியும், அங்கேரி, போர்ச்சுகல், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் நாடுகளில் மே மாதத்தின் முதல் ஞாயிறு அன்றும் பிரேசில், ஜெர்மனி, ஹாங்காங், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர், தைவான், அமெரிக்கா, கனடா, சுலோவோகியா, அல்பேனியா, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிறு அன்று கொண்டாடத் தலைப்பட்டதும் ஒவ்வோர் ஆண்டும் இந்தப்பட்டியலில் புதிதுபுதிதாக இடம்பிடித்து இன்றைக்கு உலகம் முழுவதும் "அன்னையர் தினம்" கொண்டாடும் நிலைக்கு வந்துவிட்டது.
அம்மா என்று அழைக்காத உயிர் ஏதும் உண்டா? அம்மா என்றால் அன்பு என்றும் தாயில்லாமல் நானில்லை; தானே எவரும் பிறந்ததில்லை; எனக்கொரு தாய் இருக்கின்றாள்; என்றும் என்னைக் காக்கின்றாள்...போன்ற திரைப்படப் பாடல்கள் அன்னையின் புகழை வீதிகளில் முழக்கினாலும் ஆதரவற்றோர் இல்லங்களிலும், முதியோர் இல்லங்களிலும் உள்ளம் உடைந்து நித்தம் கண்ணீர் விடும் அன்னையர்கள் நாளும் பெருகுவதும் ஒருபுறம் வேதனை தருவதும் தவிற்க இயலாததாகிவருகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் மூலமாகவாவது ஒரு சில அன்னையர்கள் தன் பிள்ளைகளோடு வசிக்கும் பேறு கிடைக்கப் பிரார்த்திப்போம்.

நாமும் "மூலம்" அறிந்து கொண்டோம்; வாயார மனமார வாழ்த்திப் போற்றுவோம் நம் "அன்னையை!"

-ஆல்பர்ட், விஸ்கான்சின், அமெரிக்கா.

Tuesday, May 01, 2007

<>மே தினம்<>


<>சர்வதேச உழைப்பாளர்
(மே)
தினம்<>




ன்றைக்கு அரசாங்க அலுவலகமாகட்டும் அல்லது

தனியார் தொழில் நிறுவனமாகட்டும் காலையில் 8 மணிக்கு

அல்லது 9மணிக்கு வேலைக்குப் போனால் எட்டு மணி நேர வேலையை ( கொட்டாவி விடுறது... குட்டித்தூக்கம் போடுறது... சாப்பாடு.... டீக்கடையில் கொஞ்ச நேர அரட்டை... அலுவலக நேரத்தில்......

"ம்ம்ம்... அப்பறம் நேத்து அந்தப்படத்துக்கு டிக்கெட் கெடச்சதா",
"பின் லேடன் உயிரோட இல்லையாமே".... சரிசரி..வாங்க
கேண்ட்டீன் போய் டீ...சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம் என்ற அலசல் நேரம் உட்பட ) ஹாயா முடிச்சுட்டு ஜோரா வீட்டுக்குத் திரும்பிடுறோம்.

மேனேஜரோ இல்ல மத்தவங்களோ மாலை 5 மணிக்கு அந்த ·பைலை கொஞ்சம் பாத்துக் குடுக்க முடியுமா? என்று கேட்டால் இன்னைக்கு டயமாயிடுச்சு எல்லாம் நாளைக்குத்தான் என்று ஜம்பமாகச் சொல்லிவிட்டு கிளம்பிவிட முடிகிறது. மீறிக் கேட்டால் தகராறு... யூனியன், தொழிற்சங்கம் ஸ்டிரைக் என்ற மிரட்டல் எல்லாம் கூட வெளிப்படும். காரணம். இன்றைக்கு 8 மணி நேர வேலை என்பது உத்திரவாதப்படுத்தப்பட்ட ஒன்று.

8மணி நேரம் உழைப்பு (வேலை), 8 மணி நேரம் பொழுதுபோக்கு, 8 மணி நேரம் ஓய்வு (உறக்கம்)என்ற குரல் அங்கிங்கெனாதபடி உலக நாடுகளில் ஒலித்தது. ஒலித்தவர்களில் எண்ணற்ற குரல்வளைகள் நெறிக்கப்பட்டது.‌ஒலித்த குரல்களின் உயிர்களைக் குடித்த குண்டுகள் எத்தனை? அடித்து நொறுக்கப்பட்டு முடமக்கப்பட்ட உயிர்கள் எத்தனை? தங்கள் இன்னுயிரை ஈந்து அவர்கள் தந்த வெப்பமான எட்டுமணி நேர உத்திரவாதத்தால்தான் இன்று உலகத் தொழிலாளர்கள் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது முலாம் பூசப்படாத 24 காரட் உண்மை!

நூறு... நூத்தம்பது வருஷத்துக்கு முன்பு என்றால் இப்படி எல்லாம் சொகுசாக வேலை பார்க்க முடியுமா? 16மணி நேரம் 17 மணி நேரம் என்று உழைத்து ஒடாய்த் தேய்ந்த நம் முன்னோர்கள் புயலெனப் பொங்கி எழுந்து உழைப்பவர்களூக்கு உரிய உரிமை வேண்டும் என்று கண்ணீரும் செந்நீரும் சிந்தியதால் தான் இன்றைக்கு நாம் 8 மணி நேர வேலை என்ற சுகத்தை அனுபவிக்கிறோம். உரிய ஊதியம், சிறப்பு ஊதியம், சம்பளத்துடன் கூடிய விடுப்பு, பிரசவகாலச் சலுகைகள், இன்ன பிறசலுகைகள் என்று சுகம் காண்கிறோம். உழைப்பாளர்கள் இல்லையேல் இவ்வுலகம் இல்லை. எட்டு மணி நேரம் வேலை; ஓவர் டைம்; போனஸ், உணவறை, ஓய்வுக்கூடம், தொழிற்கூடங்களில் பொழுதுபோக்கு மன்றம், ஓய்வூதியம், இன்ன பிற வசதிகள் இன்றைக்குத் தொழிலாளர்கள் பெற்று இருக்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் எண்ணற்ற தொழிலாளர்களின் உயிர்த் தியாகமும் அவர்கள் இட்ட புரட்சி வித்தும் தான் காரணம்.


உழைப்பாளர்களின் உழைப்பை உறிஞ்சி உண்டு கொழுத்த முதலாளித்துவத்திற்கு எதிராக புரட்சிக் கொடியூன்றியது யார்? அதன் நெடிய வரலாறு கூறும் உண்மை என்ன என்று பார்ப்போமா?



1791ம் ஆண்டில் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் முதன் முதலாக மரவேலை செய்யும் தச்சர்கள் வேலை நேரத்தைப் பத்து மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என தங்கள் குரலை உயர்த்தினர். 1810ல் சமூக வியலாளர் ராபர்ட் ஓவென் இங்கிலாந்தில் பத்து மணிநேர வேலைக்கு குரல் கொடுத்தார். 1848ம் ஆண்டு பிப்ரவரியில் வேலை நேரத்தை 12 மணி நேரமாகக் குறைக்கப் படவேண்டும் என்று பிரெஞ்சுத் தொழிலாளர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1835ல் அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து பொதுவேலை நிறுத்தத்துக்கு அறை கூவல் விடுத்தனர்.

1836ல் இந்த இயக்கத்தின் தொடர் போராட்டங்கள் காரணமாக முதலாளிவர்க்கம் சிறிது அசைந்து கொடுத்தனர். ஆனாலும் பலன் கிட்டவில்லை.


1871ல் கிரேட் பிரிட்டனில் டிரேட் யூனியன் ஆக்ட் என்ற சட்டத்தை கொண்டுவந்து தொழிலாளர்களை நசுக்க எத்தனித்தது. 1872ல் இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் ஒன்று திரண்டு எட்டு மணி நேர வேலைக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்கிற தீர்மானத்தை பிரம்மாண்ட பேரணியின் இறுதியில் முடிவெடுத்தனர்.

ஆஸ்திரேலியா....

18ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள பல்வேறு தீவுகளிலிருந்தும்,பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட‌கைதிகள் மற்றும் அடிமைகளைக் கொண்டு கட்டுமானப்பணிகளுக்கு பயன்படுத்தினர். இவர்கள் இரவுபகல் பாராது கடுமையான வேலைகளைச் செய்யப் பலவந்தப்படுத்தப்பட்டனர்! பலர் சரியான உணவின்மையாலும், ஓய்வின்மையாலும் மரணத்தைத் தழுவினர். தங்களைப்பாதுகாக்க யூனியன் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பத் துவங்கினர். தங்களுக்கென ஒரு அமைப்பை ஏற்படுத்தமுயல்வதைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளுடன் ஆலோசித்தது. ஒருமணிநேரம் தாமதமாக வேலைக்கு வந்தாலும் அவர்களுக்கு கடுமையான சிறைத்தண்டனை அல்லது மிகக்கடுமையான வேலைகளைச் செய்யுமாறு வற்புறுத்தப்பட்டனர். இதே நேரத்தில் தி மாஸ்ட்டர் அன்ட் சர்வன்ட் என்ற சட்டத்தை ஆஸ்திரேலிய அரசாங்கம் பிரிட்டன் 1823ம் ஆண்டு இயற்றிய சட்டத்தைப்போல 1845ல் இயற்றி முதலாளித்துவ‌ வர்க்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டது.


ஏப்ரல் 21,1856ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக் கழக வளாகத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு திடீரென்று கட்டிடம் கட்டும் தொழிலாளர்கள் பேரணி ஒன்றை நடத்தி அரசை ஸ்தம்பிக்கச் செய்தனர். இதுதான் ஆஸ்திரேலிய வரலாற்றில் உழைப்பாளர்கள் ஒன்று திரள வழிவகுத்ததோடு எட்டுமணி நேர வேலையை வென்றெடுக்க பின்னாளில் வழிவகுத்தது!



(முதலாளிகளுக்குச் சாதகமாக 1847ல் அமெரிக்காவிலும்,கனடாவிலும், 1856ல் நியூசிலாந்திலும், தென் ஆப்பிரிக்காவிலும், கிரேட் பிரிட்டனில் 1871லும் சட்டங்கள் இயற்றப்பட்டது.)



அமெரிக்கா.....


அன்று...1863களில்...
அமெரிக்காவில் நியூயார்க் நகர வீதிகளில் 11 வயதுச் சிறுவன் ஒருவன் கைகளில் நாளிதழ்களைச்சுமந்துகொண்டு விடிந்தும் விடியாத காலைப் பொழுதுகளில் வாய் வலிக்கக் கத்தி விற்பான். கடைசிநாளிதழ் விற்றானதும் தயாராகத் தோளில் தொங்கவிட்டிருக்கும் பையில் அவனது அடுத்த வேலைஆரம்பமாகிவிடும். அவசரவசரமாக அலுவலகம் போவோரை, அய்யா ஒங்க ஷ¥வுக்கு கொஞ்சம் பாலீஷ்போட்டு விடுறேன், குடுக்குற காசைக் குடுங்கய்யா..." என்ற கெஞ்சலோடு, அவனுடைய ஷ¥ பாலீஷ்வேலை நடக்கும். ஒருவாறு இந்த வேலையை எல்லாம் முடித்துக்கொண்டு வெவ்வேறு தெருவில் உள்ளநாலைந்து கடைகளுக்கு அடுத்தடுத்துச் சென்று பம்பரமாகக் கூட்டிப் பெருக்கி அங்குள்ள பொருட்கள்மேலுள்ள தூசி துடைத்து ஒழுங்காக அடுக்கி வைக்கவேண்டும். காலை நாலு மணிக்குத் துவங்கி பத்துமணிக்குள் இத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு அப்பாடா என்று அவனால் ஒரு நிம்மதிப் பெருமூச்சுகூட விடமுடியாது. ஒரு சில கடைகள், ஒரு சில அலுவலகங்கள் தருகிற கடிதங்களை எடுத்துக்கொண்டுஅந்தந்த முகவரியைத் தேடிக்கண்டுபிடித்து அந்தத் தபால்களைப் பட்டுவாடா செய்யவேண்டும். இடைப்பட்ட நேரத்தில் ஒரு ரொட்டியை வாயில் போட்டு தண்ணீர் குடித்து காலைக்கும் மதியத்துக்குமானவயித்துப்பாட்டை சரி செய்துகொள்வான். இவ்வளவு பாடும் அவனுடைய அம்மா மற்றும் ஆறு சகோதரசகோதரிகளுக்காக கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறந்த அந்தச் ஐரிஷ் சிறுவனின் பெயர்பீட்டர் மெக் குரி ! ( Peter Mc Guire ) .


டிஸ்மிஸ்...
19ம் நூற்றாண்டுத் துவக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் நியூயார்க்நகரில் காலூன்றத் துவங்கிய நேரம். அவர்கள் தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறி வேறு ஒரு சுவர்க்கபுரிக்குப் போகப்போகிறோம் என்ற கனவோடு இவர்கள் நியூயார்க் நகரில் கால் பதித்தபோது அவர்களின்கனவு நொறுங்கித்தான் போனது. ஆறு குடும்பங்கள் ஒரு குடும்பம் மட்டுமே வசிக்கக்கூடிய ஒரு வீட்டில்நெருக்கியடித்து மூட்டை முடிச்சுகளாய் மாறியிருந்தனர். இரவு எப்போது ஒழியும் என்று காத்திருந்ததுபோல விடிந்தும் விடியாத... புலர்ந்தும் புலராத வெளையில் வீட்டைவிட்டு வெளியேறும் இவர்களின்ஆயிரக்கணக்கான குழந்தைகள் பீட்டரைப்போல வேலை தேடி தெருக்களில் வலம் வந்தனர். இவர்களுக்குகிடைக்கும் வேலைகள் எளிய வேலைகள் அல்ல; வேலைத் தரம் மிக மோசமாக இருந்தது. புலம் பெயர்ந்துவந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் 10 மணி நேரம், 12 மணி நேரம், 14 மணி நேரம் என்றுவேலை பார்க்க கட்டாயப்படுத்தப்பட்டனர். இடைப்பட்ட நேரத்தில் சாப்பிட மிகக்குறைந்த நேரமேகொடுக்கப்பட்டது. வேலை செய்யக்கூடிய நிலையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரியானநேரத்துக்கு வேலைக்கு வராவிட்டால் "டிஸ்மிஸ்" தான். உடல்நிலை சரியில்லை என்றாலும் அவர்களுக்குஇரக்கம் காட்ட அங்கே யாரும் இல்லை. திண்ணை எப்போது காலியாகும் என்பது போல வேலைஇல்லாமல் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் இவர்கள் இடத்தைக் கைப்பற்றக் காத்துக்கிடந்தார்கள்.
தொழிற்சங்கம்...
பீட்டருக்கு 17 வயாதானபோது ஒரு பியானோ கடையில் வேலைக்குச் சேர்ந்தான். இது அவன் பார்த்தமற்ற வேலைகளைவிடப் பரவாயில்லாமலிருந்தது. இருந்தாலும் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலைபார்க்கவேண்டிய சூழ்நிலையே இருந்தது. இரவு நேரங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக சிந்தனைகுறித்த வகுப்புகளுக்கும் கூட்டங்களுக்கும் சென்றான். இதில் அவனைக் கவர்ந்த விஷயம் தொழிலாளர்களின்வேலைத் தரம் பற்றியதாகும். நிச்சயமற்ற வேலைகளாலும், மிகக் குறைந்த சம்பளத்தாலும், நீண்ட நேரம்வேலை பார்ப்பதாலும் தொழிலாளர்கள் உற்சாகமிழந்து சலிப்புற்ற நிலையில் களைப்படந்து போய்இருந்ததை பீட்டர் உன்னிப்பாக கவனித்தான். இந்த நிலை மாற என்ன செய்வது என்று தொழிலாளர்கள்தங்களுக்குள் பேசிப்பேசி தீர்வு கிடைகாமல் உழல்வதையும் பீட்டர் கவனிக்கத் தவறவில்லை. தொழிலாளர்களின்வாழ்வில் ஒரு வசந்தமாக அந்த வசந்தகாலம் மலரத் துவங்கிய 1872ல் பீட்டர் நியூயார்க் நகரின் மூலைமுடுக்கிலிருந்த தொழிலாளரை எல்லாம் ஒன்று படுத்தி தொழிலாளர்களுக்காக ஒரு தொழிற் சங்கம்வேண்டும் என்று பேசிய அவன் சொற்பொழிவுகளுக்கு கூட்டம் சேர்ந்தது. ஏப்ரல் மாதத்தில் நியூயார்க்நகரம் கண்டிராத வகையில் பீட்டர் தலைமையில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் திரண்டனர். நீண்ட வேலைநேரத்தைக் குறைக்கவேண்டும் என்ற அவர்கள் பேரணிக் கோஷம் தொழிலதிபர்களுக்கு பேரிடியாக இருந்தது.
தொழிலாளர்களுக்கு ஒரு இயக்கம் தேவைதான் என்ற நிலையை இந்தப் பேரணி ஏற்படுத்தியது. எதிர்காலத்தில்தொழிலாளர்களின் உரிமைகளைப் பேணிக்காக்க ஆங்காங்கே தொழிர்சங்க அமைப்புகளையும் பேரமைப்பையும்தோற்றுவிக்கவேண்டிய அவசியம் பற்றி தொழிலாளர்கள் மத்தியில் பீட்டர் பேசிய பேச்சுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.வேலையில்லாத் திண்டாட்டம் போக்கவும் அவர்களுக்கு நிவரணத் தொகை வழங்கவேண்டுமென்றும் அரசிடம்கோரிக்கைகளை பீட்டர் முன் வைத்தபோது அரசு அதை அலட்சியப்படுத்தியது. மாறாக " பொது மக்களின்அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துகிற நபர் " என்ற முத்திரை குத்தப்பட்டார். பீட்டர் பார்த்த வேலையும் சிலவிஷமிகளால் பறிபோனது. தொழிலாளர்களை ஒன்று படுத்தி இயக்கம் உருவாக்குவதில் முன்னிலும் முனைப்போடுஊர் ஊராக பயணம் செய்து தொழிலாளர்கள் மத்தியில் பேசி தொழிற்சங்கம் துவங்கக் கோரினார்.1881ல் பீட்டர் மிசூரி மாநிலத்தில் (Missouri State ) உள்ள செயிண்ட் லூயிஸில் குடியேறினார். அங்குள்ளதச்சுத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி தொழிற்சங்கம் ஒன்றைத் துவக்கினார். தொடர்ந்து தேசிய அளவில்ஒரு மாநாட்டை சிகாகோ நகரில் கூட்டி தேசிய அளவிலான தச்சுத் தொழிலாளர் அமைப்பை உருவாக்கினார்.இவ்வமைப்புக்கு பீட்டரையே பொதுச்செயலராகத் தேர்ந்தெடுத்தனர்.


எட்டு மணி நேர வேலை...


இந்த ஒற்றுமையான தேசிய அளவிலான தொழிலாளர் இயக்கத்தைக் கண்ட அமெரிக்க மாநிலங்களில்உள்ள பிற தொழிலாளர்களிடமும் ஒரு உற்சாகம் பிறந்தது. காட்டுதீ போல பரவிய இந்த உற்சாகம்ஆலைத் தொழிலாளர்கள், பிற தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் ஆங்காஙேதொழிற்சங்கங்களை உருவாக்கி எல்லோரும் பீட்டரின் வழியில் 8 மணி நேர வேலை, வேலைப் பாதுகாப்புபோன்ற சலுகைகளைக் கோரி கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். பீட்டர் மற்ற தொழிற்சங்கத்தினரோடுகூட்டுக் கூட்டங்கள் நடத்தி செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையை தொழிலாளர்களுக்கானவிடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென்று அரசை வற்புறுத்தும் வகையில் தீர்மானம் ஒன்றைக்கொண்டுவந்தார். இந்த நாள் அமெரிக்கச் சுதந்திர தின நாளுக்கும் நன்றி கூறும் நாளுக்கும்இடையில் அமையவேண்டுமென்றும் குரல் கொடுப்போம் என்றார் பீட்டர்.பல மாநிலங்களில் தொழிலாளர் தினப் பேரணிகள் கலை நிகழ்ச்சிகள் நடை பெறுவதும்தொழிலாளர்கள் கூட்டமாக ஓரிடத்திற்கு பிக்னிக் போலச் சென்று உல்லாசமாகக் கழிப்பதும் வருடந்தோறும்நடந்தேறுகிற நிகழ்வாகிவிட்டது. அரசியல்வாதிகள் கூட தங்கள் இயக்க நடவடிக்கைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்த நாளில் பேரணி நடத்துவதும் வழக்கமாகிவிட்டது.


பொதுவாக அமெரிக்கர்கள் தொழிலாளர் தினத்தை கோடைகாலத்தின் கடைசி நீண்ட விடுமுறை நாளாகக்கருதி பீச்சுகளிலும் புகழ்பெற்ற ஓய்விடங்களிலும் குவிந்து உல்லாசத்தின் உச்சிகளுக்குச் சென்று மகிழ்ச்சிக்கடலில் நீந்துவது வழக்கம்.


1866ல்அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் ஜெனரல் காங்கிரஸ் தொழிலாளர்கள் எட்டுமணி நேர வேலை எங்கள் லட்சியம் என்ற பொதுக் கோரிக்கையை முன்வைத்துப் போராட்டத்தைத் துவங்கினர்.


1886 மே மாதம் 1ம் தேதி அமெரிக்காவின் பல மாநிலங்களில் முறைப்படுத்தப் பட்ட தொழிலாளர் அமைப்புகள் ஒன்று பட்ட இயக்கமாக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை அங்காங்கே நடத்தினர். நியூயார்க் யூனியன் சதுக்கத்திலும், கென்டக்கியில் லூயிஸ்வில்லியிலும் மற்றும் பால்டிமோரில் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் சற்று வித்தியாசமாக அநைவரின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. வெள்ளையர் கறுப்பர் என்ற பேதமின்றி ஒருங்கிணைந்து புரட்சிக் குரல் எழுப்பினர். மெய்னி முதல் டெக்சாஸ் வரையிலும், நியூஜெர்சியிலிருந்து அலபாமா வரையிலும் ஒருங்கிணந்த தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.




உலகமெங்கும் " மே " மாதத்தில் தொழிலாளர் தினம் கொண்டாடும்போது ஏன் ? அமெரிக்காவில்... கனடாவில் மட்டும் செப்டெம்பர் மாதத்தில்....என்று பலர் புருவங்களை உயர்த்துகிறார்கள்?!1882ம் ஆண்டு செப்டெம்பர் 5ம் நாள் திடீரென்று நியூயார்க் நகரில் 20 ஆயிரம் பேர்கள் அடங்கிய தொழிலாளர் தின பேரணி ப்ராட்வேயில் துவங்கியது. அவர்கள் தாங்கி வந்த பதாகைகளில்" LABOR CREATS ALL WEALTH " என்றும் "EIGHT HOURS FOR WORK, EIGHT HOURSFOR REST, EIGHT HOURS FOR RECREATION !" என்ற வாசகங்கள் அமெரிக்கத் தொழிலாளர்களைவசீகரிக்கும் மந்திரச் சொல்லானது. பேரணி முடிந்ததும் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக விருந்துண்டுமகிழ்ந்தனர்.



அன்றிரவு வானவேடிக்கைகள் நியூயார்க் நகரையே வெளிச்ச பூமியாக்கியது. இந்தவெளிச்சம் அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மனதில் பிரகாசித்தது. அரசு அறிவிக்காவிட்டால்என்ன? நமக்கு நாமே விடுமுறை எடுத்துக்கொண்டு தொழிலாளர் தின பேரணி நடத்துவோம் என்றுஒவ்வொரு மாநிலத் தொழிலாளர்களும் அடுத்த ஆண்டிலிருந்து வேலைக்குச் செல்லாமல் தொழிலாளர் தினம்கொண்டாடினர்.

O0Oசிகாகோ கலகம்O0O


இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல சிகாகோவில் ஹேய் மார்க்கெட் பகுதியில் 1886ம் ஆண்டு 90,000 தொழிலாளர்கள் "எட்டு மணி நேர வேலை" என்கிற பொது கோரிக்கைக்கு பேரணி ஒன்றை அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு "மே" மாதம் 4ம் தேதி ஏற்பாடு செய்தது.

சிகாகோவின் அந் நாள் மேயரும் அந்தப் பேரணியில் கலந்து கொண்டார். பேரணி அமைதியாக நடந்து முடிந்து பொதுக்கூட்டம் ஹேய் மார்க்கெட்டில் நடந்துகொண்டிருந்த வேளையில் மேயர் பொதுக்கூட்ட மேடையை விட்டு வெளியேறியதும் அங்கிருந்த காவல் துறைத் தலைவர் கூட்டத்தைக் கலைக்கத் தடியடி கண்ணீர் புகைக் குண்டுகளை வீச...... தொழிலாளர் தரப்பிலிருந்த சிலர் போலீசாரிடமிருந்த ஆபத்தான வெடிகுண்டுகளைக் கைப்பற்றி ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் மீதே வீச நூற்றுக்கணக்கான காவலர்கள் காயமுற 66 காவலர்கள் உயிரிழந்தனர். 12க்கும் மேற்ப‌ட்ட‌ தொழிலாள‌ர்க‌ள் இற‌ந்த‌ன‌ர். எண்ண‌ற்ற‌ தொழிலாள‌ர்க‌ள் காய‌முற்ற‌ன‌ர்.


கிட்டத்தட்ட காவலர்கள் அதிக அளவில் உயிரிழந்த தொழிலாளர் போரட்டமாய்அன்றைய தினம் அமைந்தது....தொழிலாளர்களின் மன உறுதி, போராட்ட வேகம்எத்தகையது என்பதைக் கொஞ்சம் கற்பனைக் கன் கொண்டு பார்க்க இயலும்.


காவலர்கள் களப்பலியானதும் காவலர்களின் சினம் முழுக்க தொழிலாளர்கள் மீது திரும்ப நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையான காயங்களோடும் ஏழு தொழிலாளர்கள் இறக்கவும் நேரிட்டது. இல்லிநாய்ஸ் கவர்னர் ஜான் கடுமையான விசாரணைக்கு உத்தரவிட்டார். அரசு ஏராளமான தொழிலாளர்கள் மீது வழக்குத் தொடுத்தது. இதன் மூலம் தொழிற் சங்க அமைப்பை நசுக்கிடத் திட்டமிட்டது அரசு.தொழிலாளர்கள் தலைவர்கள் சிலரை தூக்கிட்டு அரசு கொக்கறித்தது. ஆனால் நடந்தது வேறு.


பேரியக்கம்...

சிகாகோவில் நடைபெற்ற கலகம் உலகம் முழுக்க உள்ள தொழிலாளர்களைக் கொதித்தெழ வைத்தது. இங்கிலாந்து, ஹாலந்து, ரஷ்யா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாட்டுத் தொழிலாளர்களின் கடும் கண்டனத்தைப் பெற்றதோடு சிகாகோ கலகத்திற்கு காரணமான இல்லிநாய்ஸ் மாநில அரசினைக் கண்டித்து கண்டன ஊர்வலங்கள் நடத்தினர்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிதி உதவிடவும் வழக்கு நடத்தப் போதிய நிதி அளித்திடவும் உலகெங்கும் உள்ள தொழிலாளர்கள் நிதி சேகரித்துக் கொடுத்தனர். உலகெங்கும் தொழிலாளர் அமைப்புகள் உருவாகவும் உலகலாவிய பேரியக்கமாக மலர சிகாகோ கலகம் காரணமாகிப் போனது.

அன்றைய ஜெர்மானியப் பிரதமர் பிஸ்மார்க்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நேசக்கரம் நீட்டியதும் தொழிலாளர் வரலாற்றில் மிக முக்கியமாய் குறிப்பிடத்தக்கது.



1894 ல்..... அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்களே அதுபோல அரசாங்கம் ஒருவழியாக அறிவித்தது.1894ல் காங்கிரசு ஓட்டளிக்கவே அமெரிக்கக் கூட்டரசு செப்டெம்பர் மாத முதல் திங்கட்கிழமை நாளைஅரசு விடுமுறை நாளாக அறிவித்தது.இன்றைக்கு அமெரிக்கா, கனடா நாடுகளில் செப்டெம்பர் முதல் திங்கட்கிழமையை தொழிலாளர் தினமாகக்கொண்டாடுகின்றனர்.


பல மாநிலங்களில் தொழிலாளர் தினப் பேரணிகள் கலை நிகழ்ச்சிகள் நடை பெறுவதும்தொழிலாளர்கள் கூட்டமாக ஓரிடத்திற்கு பிக்னிக் போலச் சென்று உல்லாசமாகக் கழிப்பதும் வருடந்தோறும்நடந்தேறுகிற நிகழ்வாகிவிட்டது. அரசியல்வாதிகள் கூட தங்கள் இயக்க நடவடிக்கைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்த நாளில் பேரணி நடத்துவதும் வழக்கமாகிவிட்டது.



பொதுவாக அமெரிக்கர்கள் தொழிலாளர் தினத்தை கோடைகாலத்தின் கடைசி நீண்ட விடுமுறை நாளாகக்கருதி பீச்சுகளிலும் புகழ்பெற்ற ஓய்விடங்களிலும் குவிந்து உல்லாசத்தின் உச்சிகளுக்குச் சென்று மகிழ்ச்சிக்கடலில் நீந்துவது வழக்கம். ஒரு நாட்டின் பொருளாதாரம் கொழிக்க உழைப்பவர்கள் தொழிலாளர்கள்!தொழிலாளர்கள் என்ற இயந்திரம் சீராக பழுதின்றி இயங்கிட அவர்கள் உற்சாகம் பெற ஒரு நாள்விடுமுறை என்ற அங்கீகாரம் நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும் அதற்கு மூலகர்த்தாக்களாக செயல் பட்ட பீட்டர் போன்றவர்களை இந் நாளில் நினைவு கூர்வது நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதை.... இல்லையா?


கனவும் நனவும்....
தொழிலாளர் ஒற்றுமையும், தொழிலாளர் இயக்க வலிமையும் இறுதியில் "எட்டு மணி நேர வேலை" என்றஅரசின் அங்கீகாரத்தை வென்றெடுத்தன.
தொழிலாள வர்க்கத்தின் கனவு நனவானது 1888 ம் ஆண்டு மே மாதம் 1ம்தேதியாகும். முதலில் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் கிடைத்த அங்கீகாரம் படிப்படியாக ஒவ்வொரு நாடும் பெறக் காரணமாய் அமைந்தது.


1889ல் பாரீஸ் மாநகரில் 400 சர்வதேச தொழிலாளர் பிரதிதிகள் கூடினர். உலகத் தொழிலாளர்களின் பல்வேறு நலத் திட்டங்களுக்கான அடித்தளமாக அந்தக் கூட்டம் அமைந்தது. அதுமட்டுமல்ல. உழைப்பாளிகள் ஒன்று படவும்அவர்தம் கோரிக்கைகள் வென்றெடுக்கக் காரணமான மே முதலாம் நாளை உழைப்பாளர் தினமாக உலகெங்கும் கொண்டாடுவதென முடிவெடுத்தனர்.

1891ம் ஆண்டு மே1ம் தேதி முதன் முதலாக ரஷ்யா, பிரேசில் மற்றும் அயர்லாந்தில் "மே" தினத்தைக் கொண்டாடினர்.


சைனாவில் 1920 லும், இந்தியாவில் 1927லும் (இந்தியாவில் கல்கத்தா,
சென்னை மற்றும் மும்பை ஆகிய நகரங்களில்) அமெரிக்காவில் மே தினத்தன்று ஊர்வலங்கள் நடத்தினாலும் 1905ம் வருடத்திலிருந்து வருடம்தோறும் செப்டம்பர் மாதம் முதல் திங்கள் கிழமையன்று தொழிலாளர் தினமாக அரசு அறிவித்து கொண்டாடுகிறது.
கனடாவும் செப்டம்பர் மாதம் முதல் திங்கள்கிழமையையே தொழிலாளர்தினமாக அங்கீகரித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில்.....

தமிழகத்தில் உழைப்போரே உயர்ந்தோர், உழைப்போருக்கே உலகம் உடமைஎன்ற கொள்கையை தன் உயிர்மூச்சோடு இணைத்துக்கொண்டு வாழ்ந்த சிங்காரவேலர் "மே" தினக் கொடியேற்றிக் கொண்டாடியதும் 1923ல் இந்துஸ்தான் லேபர் கிசான் கட்சி முகிழ்க்கவும், சிங்காரவேலரின் இருப்பிடமே தலைமையிடமாகத் திகழ்ந்தவரலாறும் தொழிலாளர்கள் மறந்துவிட முடியாத மாசற்ற உண்மையாகும்.



1908 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற "கோரல் மில்' தொழிலாளர்களின் போராட்டம் குறிப்பிடத்தக்கது. 1918 ஏப்ரல் 27 அன்று "மெட்ராஸ் லேபர் யூனியன்' என்ற தொழிற்சங்கம் சென்னையில் உருவானது. இதுவே தமிழ்நாட்டில் அமைப்பு முறையில் தொடங்கப் பெற்ற முதல் தொழிற்சங்கமாகும்.


இதன் தலைவராக வாடியாவும், செயலாளராக செல்வபதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவியாக திரு.வி.க., சர்க்கரைச் செட்டியார் மற்றும் சிங்கார வேலர் ஆகியோர் செயல்பட்டனர். உயர் நீதிமன்றத்திற்கு எதிரேயுள்ள கடற்கரையில் இவர் தலைமையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையில் கிருஷ்ணசாமி சர்மா தலைமையிலும் மேதினக் கூட்டங்கள் நடைபெற்றன.

1889லிருந்து தொழிலாளர் விடுமுறை தினமாக மே முதல் நாளை இந்தியாவும் எகிப்தும் அறிவித்ததாக ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கிறது.சிங்கப்பூர் மே தினத்தை உழைப்பாளர் தினமாக கொண்டாடுவதைவழக்கமாகக் கொண்டுள்ளது.

போராடுவோம், போராடுவோம்...வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!! இந்தப்படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?அஞ்சோம், அஞ்சோம் அடக்குமுறை கண்டு அஞ்சோம்! தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக! போன்ற சிங்காரவேலரின் சிறப்புக் கோஷ‌ கீதங்கள் இன்றளவும் நம் செவிப்பறையில் ஆங்காங்கே விழுந்துகொண்டுதானே இருக்கிறது!



உழைப்பாளர்களுக்கான தமிழகத் தந்தை சிங்காரவேலர் அவர்களுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு (2006) மார்ச் திங்கள் 2ம் நாளன்று அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்தது! உழைப்போரால் தான் இந்த உலகம் இன்னும் கம்பீரமாகச் சுழன்றுகொண்டிருக்கிறது, என்றால் அது மிகையில்லை!!!