Wednesday, August 15, 2007

விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள்





சுதந்திர வேள்வியில் திரைப்படங்கள்

கூட தங்கள் பங்களிப்பை பாங்கோடு

செய்திருப்பதைக் காண முடிகிறது.

அதர்மத்தை எதிர்க்கிற துணிச்சல்,

அக்கிரமத்தின் ஆணிவேரைக் கிள்ளி

எறிகிற பங்களிப்புக்கள் அவை.


பொத்தாம் பொதுவில் ஓய்ந்து போன

சொற்களுக்குள் ஒளிந்து கொள்ளாமல்,

நாட்டுப்பற்றினை வலியுறுத்தியும்,

அந்நியனுக்கு இங்கென்ன வேலை என்ற


உணர்ச்சிக் கொந்தளிப்பை பாமரனுக்கும் ஏற்படுத்துகின்ற

புரட்சிப் படைப்புக்களாக திரைப்படங்கள் வெளிவந்தன.

முதன் முதலாக தமிழில் பேசும்படமாக வெளிவந்தது

காளிதாஸ் திரைப்படம்! காளிதாஸ் படத்தின் கதை மகாகவி காளிதாசரின் கதை. இருந்தாலும் விடுதலை வேட்கைப்

பாடல்களை அன்றைய காலகட்டத்தில் உணர்ச்சிக்

கவியாக வடித்த பாஸ்கரதாஸ் இந்தப் படத்தில்

"ராட்டினமாம் காந்தி கைபானமாம்" என்று பாடலை

எழுதி 1930-களில் கிராமங்களில் கூட அந்தப் பாடலை

முணுமுணுக்கச் செய்தார்.


1934-ல் ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்
பத்திரிக்கை, பலகலைக்கழகம், திரைப்படத்துறை போன்ற துறைகளிலிருந்து திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர்
களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வன்முறை, பாலுணர்ச்சியைத்
தூண்டும் காட்சிகள் தவிர்க்கப்பட்டு அரசியல் கருத்துக்கள் புகுத்தப்படவேண்டும் என்ற வேண்டுகோள்கள்
செவிமடுக்கப்பட்டதால் திரைப்படத் தயாரிப்பாளர்களும்
இதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் படங்களைத் தயாரித்தளிக்க முற்பட்டனர்.
1935ல் டம்பாச்சாரி என்ற படத்தில் மேலை நாட்டுக்
கலாச்சாரம் தமிழனைச் சீரழிக்கப் போகிறது என்பதை
எடுத்துக் காட்டும் வண்ணம் அமைந்திருந்தது.
ஒரு பெண் புகைப்பிடிக்கும் காட்சியை இந்தப் படத்தில் அமைத்திருந்ததோடு மேற்கத்தியக் கலாச்சாரம் அது
நமக்குத் தேவையில்லை என்பதை வலியுறுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
எந்தப் படமாக இருந்தாலும் தேசப்பற்றோடு சில
காட்சிகளை அல்லது பாடல்கள் அல்லது ஒரு சில
வசனங்கள் இல்லாமல் திரைப்படங்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.
1936-ல் வெளியான தர்மபத்தினி காந்தியின் ராட்டையைத்
தன் வாழ்வின் பிடிப்பாக எண்ணிப் போராடி வெற்றி பெறுகின்ற உணர்ச்சிக் காவியமாக வெளிவந்தது. அதே ஆண்டில்
வெளியான இரு சகோதரர்கள் வெள்ளையர்களை
வெகுண்டெழச் செய்யும் விதமாக அவர்களின் ஆட்சி
அலங்கோலத்தை வெளிப்படுத்தும் விதமாக வந்தது.
1938ல் விடுதலைப் போராட்ட கால பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான மு.வ. ஸ்ரீ ராமானுஜர் என்ற படத்துக்கு வசனம் எழுதினார். சுதந்திரக் கனலை மூட்டும் வண்ணமாக வசனங்களைத் தீட்டியிருந்தார்.
1939-ம் ஆண்டு கல்கியின் தியாக பூமி புரட்சிக் கருத்துக்களை
நறுக்குத் தெரித்தாற் போன்ற வசனங்களைத் தாங்கி
வெளியானது. அதே ஆண்டு தமிழக மந்திரிசபை ராஜினாமா
செய்ததை அடுத்து ஆங்கில அரசு இந்திய சுதந்திரப் பிரச்சாரத்தைப் புகுத்தி படங்கள் எடுக்கக்கூடாது என்று ஆங்கிலேய அரசு உத்திரவிட்டது. அதே நேரத்தில் திரைப்பட இயக்குனர் கே.சுப்பிரமணியம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையைத்
துவங்கி நடிகர்கள் அணியும் ஆடைகள், ஆபரணங்கள் போன்ற அனைத்தும் சுதேசியாக இருக்க வேண்டும் என்று துணிச்சலாக வற்புறுத்தினார்.
1940-ம் ஆண்டு வெளிவந்த மகாத்மா காந்தி வரலாற்றுப்
படத்தை ஏ.கே.செட்டியார் தயாரித்திருந்தார். தொடர்ந்து
உலகப்போரும் மூண்டிட அன்றையப் போர் நிகழ்வு,
அதனையொட்டிய சமூக வாழ்க்கையை வெளிச்சமிட்டுக்
காட்டும் வண்ணம் படங்கள் வெளியானது.
1945,46-ம் ஆண்டுகளில் முஸ்லீம்களுக்கு தனி நாடு
வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து அதன் தொடர்பாக போராட்டங்கள், வன்முறை, கலவரம் வெடிக்க இந்து
முஸ்லீம் ஒற்றுமையைச் சித்தரிக்கும் படங்கள்
வெளியாயின. ஊமைப்படக் காலத்தில் ஆங்கிலேயர்
நிறுவிய சினிமாட்டோகிராப் விசாரணைக் கமிசன்
பாரதியாரின் தேசபக்திப் பாடல் தொகுப்புக்குத் தடை
விதித்தது. இருந்தாலும் அதையும் மீறி பாரதியாரின்
பாடல்கள் ஒலித்தன. எத்தனையோ இடர்பாடுகளுக்
கிடையேயும் நல்ல கருத்துக்கள் மக்களுக்குப் போய்ச்
சேர வேண்டும் என்ற வேட்கை அன்றைய கால
கட்டத்தில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும்
கலைஞர்களுக்கும் இருந்தது.
ஆங்கிலேய அடக்குமுறைகளைத் தாண்டி சுதந்திர
தாகத்தை தமிழக மக்களுக்கு தமிழ்த் திரைப்படங்கள்
ஊட்டியது. சுதந்திரம். அத்தகைய அரும்பணியாற்றிய
தமிழ் திரைப்பட வரலாற்றை இன்றைய திரைப்படத்
துறையினர் நினைவில் கொள்ளுதல் முக்கியம். நல்ல
செய்திகளை தங்கள் திரைப்படங்கள் மூலம் வழங்கா
விட்டாலும் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தைக் கலந்து
புதுமொழி உருவாக்கும் அவலம், தமிழ்ப் பண்பாடுகளை
சிதைத்து விடாமலிருந்தாலே தமிழர்களுக்குச் செய்யும்
நற்காரியமாக அமையும்.

No comments: