Wednesday, August 15, 2007

விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள்





சுதந்திர வேள்வியில் திரைப்படங்கள்

கூட தங்கள் பங்களிப்பை பாங்கோடு

செய்திருப்பதைக் காண முடிகிறது.

அதர்மத்தை எதிர்க்கிற துணிச்சல்,

அக்கிரமத்தின் ஆணிவேரைக் கிள்ளி

எறிகிற பங்களிப்புக்கள் அவை.


பொத்தாம் பொதுவில் ஓய்ந்து போன

சொற்களுக்குள் ஒளிந்து கொள்ளாமல்,

நாட்டுப்பற்றினை வலியுறுத்தியும்,

அந்நியனுக்கு இங்கென்ன வேலை என்ற


உணர்ச்சிக் கொந்தளிப்பை பாமரனுக்கும் ஏற்படுத்துகின்ற

புரட்சிப் படைப்புக்களாக திரைப்படங்கள் வெளிவந்தன.

முதன் முதலாக தமிழில் பேசும்படமாக வெளிவந்தது

காளிதாஸ் திரைப்படம்! காளிதாஸ் படத்தின் கதை மகாகவி காளிதாசரின் கதை. இருந்தாலும் விடுதலை வேட்கைப்

பாடல்களை அன்றைய காலகட்டத்தில் உணர்ச்சிக்

கவியாக வடித்த பாஸ்கரதாஸ் இந்தப் படத்தில்

"ராட்டினமாம் காந்தி கைபானமாம்" என்று பாடலை

எழுதி 1930-களில் கிராமங்களில் கூட அந்தப் பாடலை

முணுமுணுக்கச் செய்தார்.


1934-ல் ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்
பத்திரிக்கை, பலகலைக்கழகம், திரைப்படத்துறை போன்ற துறைகளிலிருந்து திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர்
களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வன்முறை, பாலுணர்ச்சியைத்
தூண்டும் காட்சிகள் தவிர்க்கப்பட்டு அரசியல் கருத்துக்கள் புகுத்தப்படவேண்டும் என்ற வேண்டுகோள்கள்
செவிமடுக்கப்பட்டதால் திரைப்படத் தயாரிப்பாளர்களும்
இதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் படங்களைத் தயாரித்தளிக்க முற்பட்டனர்.
1935ல் டம்பாச்சாரி என்ற படத்தில் மேலை நாட்டுக்
கலாச்சாரம் தமிழனைச் சீரழிக்கப் போகிறது என்பதை
எடுத்துக் காட்டும் வண்ணம் அமைந்திருந்தது.
ஒரு பெண் புகைப்பிடிக்கும் காட்சியை இந்தப் படத்தில் அமைத்திருந்ததோடு மேற்கத்தியக் கலாச்சாரம் அது
நமக்குத் தேவையில்லை என்பதை வலியுறுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
எந்தப் படமாக இருந்தாலும் தேசப்பற்றோடு சில
காட்சிகளை அல்லது பாடல்கள் அல்லது ஒரு சில
வசனங்கள் இல்லாமல் திரைப்படங்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.
1936-ல் வெளியான தர்மபத்தினி காந்தியின் ராட்டையைத்
தன் வாழ்வின் பிடிப்பாக எண்ணிப் போராடி வெற்றி பெறுகின்ற உணர்ச்சிக் காவியமாக வெளிவந்தது. அதே ஆண்டில்
வெளியான இரு சகோதரர்கள் வெள்ளையர்களை
வெகுண்டெழச் செய்யும் விதமாக அவர்களின் ஆட்சி
அலங்கோலத்தை வெளிப்படுத்தும் விதமாக வந்தது.
1938ல் விடுதலைப் போராட்ட கால பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான மு.வ. ஸ்ரீ ராமானுஜர் என்ற படத்துக்கு வசனம் எழுதினார். சுதந்திரக் கனலை மூட்டும் வண்ணமாக வசனங்களைத் தீட்டியிருந்தார்.
1939-ம் ஆண்டு கல்கியின் தியாக பூமி புரட்சிக் கருத்துக்களை
நறுக்குத் தெரித்தாற் போன்ற வசனங்களைத் தாங்கி
வெளியானது. அதே ஆண்டு தமிழக மந்திரிசபை ராஜினாமா
செய்ததை அடுத்து ஆங்கில அரசு இந்திய சுதந்திரப் பிரச்சாரத்தைப் புகுத்தி படங்கள் எடுக்கக்கூடாது என்று ஆங்கிலேய அரசு உத்திரவிட்டது. அதே நேரத்தில் திரைப்பட இயக்குனர் கே.சுப்பிரமணியம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையைத்
துவங்கி நடிகர்கள் அணியும் ஆடைகள், ஆபரணங்கள் போன்ற அனைத்தும் சுதேசியாக இருக்க வேண்டும் என்று துணிச்சலாக வற்புறுத்தினார்.
1940-ம் ஆண்டு வெளிவந்த மகாத்மா காந்தி வரலாற்றுப்
படத்தை ஏ.கே.செட்டியார் தயாரித்திருந்தார். தொடர்ந்து
உலகப்போரும் மூண்டிட அன்றையப் போர் நிகழ்வு,
அதனையொட்டிய சமூக வாழ்க்கையை வெளிச்சமிட்டுக்
காட்டும் வண்ணம் படங்கள் வெளியானது.
1945,46-ம் ஆண்டுகளில் முஸ்லீம்களுக்கு தனி நாடு
வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து அதன் தொடர்பாக போராட்டங்கள், வன்முறை, கலவரம் வெடிக்க இந்து
முஸ்லீம் ஒற்றுமையைச் சித்தரிக்கும் படங்கள்
வெளியாயின. ஊமைப்படக் காலத்தில் ஆங்கிலேயர்
நிறுவிய சினிமாட்டோகிராப் விசாரணைக் கமிசன்
பாரதியாரின் தேசபக்திப் பாடல் தொகுப்புக்குத் தடை
விதித்தது. இருந்தாலும் அதையும் மீறி பாரதியாரின்
பாடல்கள் ஒலித்தன. எத்தனையோ இடர்பாடுகளுக்
கிடையேயும் நல்ல கருத்துக்கள் மக்களுக்குப் போய்ச்
சேர வேண்டும் என்ற வேட்கை அன்றைய கால
கட்டத்தில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும்
கலைஞர்களுக்கும் இருந்தது.
ஆங்கிலேய அடக்குமுறைகளைத் தாண்டி சுதந்திர
தாகத்தை தமிழக மக்களுக்கு தமிழ்த் திரைப்படங்கள்
ஊட்டியது. சுதந்திரம். அத்தகைய அரும்பணியாற்றிய
தமிழ் திரைப்பட வரலாற்றை இன்றைய திரைப்படத்
துறையினர் நினைவில் கொள்ளுதல் முக்கியம். நல்ல
செய்திகளை தங்கள் திரைப்படங்கள் மூலம் வழங்கா
விட்டாலும் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தைக் கலந்து
புதுமொழி உருவாக்கும் அவலம், தமிழ்ப் பண்பாடுகளை
சிதைத்து விடாமலிருந்தாலே தமிழர்களுக்குச் செய்யும்
நற்காரியமாக அமையும்.

அகிம்சையின் வலிமை....ஆகஸ்ட் 15



இன்றைக்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்க நம்மால் முடிகிறது.
சும்மாவா சுதந்திரம் கிடைத்தது?
அந்த வீர சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிர்
ஈந்தவர் எத்தனை?
தங்கள் சுகபோகங்களை சுட்டுப் பொசுக்கிக் கொண்டு வியர்வை
சிந்தி இரத்தம் சிந்தி , உறவுகளை இழந்து, காவலர்களின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு தங்கள் அவயவங்களை
இழந்து தங்களை நாட்டுக்காக மெழுகுவர்த்தியாக
உருக்கிக் கொண்டவர்கள்
எத்தனை எத்தனை பேர்கள்!

61 வயது காந்தி 241 மைல் தன் பாதத்தை தேய்த்து உடலை
வருத்தி நடத்திய தண்டி யாத்திரை; பட்டினிப் போர் , உண்ணா
நோன்பு, ஆசிரமம், சிறைச்சாலை என்று உடலை வருத்தி
உருக்கிக் கொண்ட மகாத்மா!
அந்த மகாத்மாவோடு உருகி உதிர்ந்த தியாகிகள்
எத்தனை பேர்கள்?
அந்த மெழுகுவர்த்திகள் தந்த வெளிச்சத்தில் இன்று நாம்...!
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஒரு முக்கிய வரலாற்று
நிகழ்ச்சியாக அமைந்ததுதான் வெள்ளையனே வெளியேறு
இயக்கம். இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான்
இந்தியாவை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது.

அச்சமயத்தில், பிரிட்டிஷாருக்கு இந்தியர்கள் ஆதரவு அளிக்க வேண்டுமானால் இந்தியாவின் அதிகாரத்தையும் முழு
உரிமையையும் இந்தியர்களுக்கே திருப்பி அளிக்க வேண்டும்
என்று காந்தியடிகள் கூறினார்.பர்மா, வங்காளம் உள்ளிட்ட
பகுதிகளைத் தாண்டி முன்னேறிக் கொண்டிருந்த ஜப்பான் படையினரிடம் பிரிட்டிஷார் பின்வாங்கினர். சிங்கப்பூர்,
மலேசியா, பர்மா ஜப்பானிடம் சரணடைந்து விட்டன.

அந்நாடுகள் போரில் சீர்குலைந்தன. உணவுத் தட்டுப்பாடும்
ஏற்பட்டது. இதே நிலை இந்தியாவுக்கும் ஏற்படலாம் என்ற
அச்சம் ஏற்பட்டது. ஆகவே, இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறிவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.பிரிட்டிஷார் போரிலிருந்து நம்மை
பாதுகாப்பார்கள் என்று நினைக்காமல் நம்மை பாதுகாத்துக்
கொள்ள நமக்கு ஓர் இயக்கம் வேண்டும் என்று காந்தியடிகள் சிந்தித்தார்; சிந்தனையின் விளைவில் பிறந்த இயக்கம்தான் வெள்ளையனே வெளியேறு இயக்கம்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் காந்தி ஏன் இப்படி ஒரு
கருத்தை தெரிவிக்கிறார் என்று பல தலைவர்கள் கருதினார்கள். கோரிக்கை வைப்பதற்கு இது சரியான நேரமா என்று கூட
கேட்டனர். ஆனால், காந்தியடிகளோ, "பைத்தியக்காரன் என்று
குற்றம் சாட்டினால் கூட பொருட்படுத்த மாட்டேன்.

இந்தியாவின் விமோசனத்துக்கு செய்ய வேண்டிய கடமை
இது என்று நினைப்பேன் "என்று அப்போது காந்தியடிகள்
கூறினார்."

காங்கிரஸ் தனது விருப்பத்துக்கு இணங்காவிட்டால் ,
காங்கிரசையும் விட மகத்தான ஓர் இயக்கத்தை உருவாக்கப் போவதாக' காந்தியடிகள் எச்சரித்தார். இதனால் 1942 ஆகஸ்ட் 8ல் மும்பையில் கூடிய அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம், "வெள்ளையனே வெளியேறு' என்ற புகழ் மிக்க தீர்மானத்தை இயற்றியது. "வைஸ்ராயை சந்தித்து இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவேன். அதற்கு இரண்டு மூன்று வாரங்கள் ஆகலாம். ஆனால் அதுவரை நீங்கள் சுதந்திர குடிமகனாகக் கருதிக் கொண்டு செயல்படலாம்' என்று காந்தியடிகள் கூடியிருந்த பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசினார்.

காந்தியடிகள் வைஸ்ராயை சந்திக்கும் வரை பொறுத்திராமல், பிரிட்டிஷ் அரசு முந்திக் கொண்டது. காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்களை அன்று இரவே கைது செய்தது. காந்தியடிகள் மும்பையிலிருந்து பூனா கொண்டு செல்லப்பட்டு ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார். மறுநாள் காலை (ஆகஸ்ட் 9) இந்த செய்தியை கேள்விப்பட்டு இந்தியாவே கொதித்து எழுந்தது.

காந்தியடிகளையும் கைது செய்யப்பட்ட தலைவர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவெங்கும் ஓங்கி ஒலித்தது.

போராட்டம் புரட்சியாக உருவெடுத்தது. இப்புரட்சியை அடக்க பிரிட்டிஷார் நாடெங்கும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில்
டில்லியில் மட்டும் 76 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பொது
மக்களை காரணமில்லாமல் கைது செய்தனர். விசாரணை
இல்லாமல் தண்டனை வழங்கினர். தீவிரமான இம்மக்கள்புரட்சி, கோரமான பிரிட்டிஷ் அடக்குமுறையால் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இப்புரட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்ட வீரர்களின் உயிர்கள் காணிக்கையாக்கப்பட்டது.
தலைவர்கள் வழிகாட்டுதல் இல்லாதது, கட்டுக்கோப்பாக மக்கள் செயல்படுவதற்கு வழி தெரியாதது, பிரிட்டிஷாரின் வலிமைக்கு ஈடு கொடுக்க முடியாதது ஆகியவற்றால் இந்தப் புரட்சி அடக்கப்பட்டது. என்றாலும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்குமா...? என்ற மக்கள் மனதில் இருந்த சந்தேகம் மாறி இந்தியா எப்போது சுதந்திரம் பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அந்த எதிர்பார்ப்பு சுதந்திரமாக மலரவும் இந்த போராட்டம் அடிப்படையாக அமைந்தது.அந்தப் பரபரப்பான 1947ம் ஆண்டு
ஆகஸ்ட் 15ம் தேதி ! இந்தியா சுதந்திரம் அடைந்ததைக் கண்ட
பிறகே இறப்பேன் " என்ற காந்தியின் கண்கள் சுதந்திர இந்தியாவைத் தரிசித்தது.

அடிமை இருளில் சிக்கித் தவித்த இந்தியத் திருநாட்டு மக்கள்
சுதந்திரச் சுடரைக் கண்டனர். இந்துஸ்தானம் முழுக்க வந்தே
மாதரமும் ஜெய்ஹிந்த் கோஷங்களும் எங்கும் எதிரொலித்தது.

டில்லிப் பட்டணம் சுதந்திரக் களிப்பில் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தபோது காந்திஜி கல்கத்தாவின் சேரிப்பகுதியொன்றில் அமைதியாகச் சேவை செய்துகொண்டிருந்தார்.

இந்தியத் திருநாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த தேசத் தந்தையை வைஸ்ராய் மாளிகையில் தங்க நிகர் சிம்மாசனத்தில் வைத்து ஏந்திப் பிடிக்கத் தயாராயிருந்தனர். தன் சீடர்களான நேருவும் பட்டேலும் உப்பரிகையில் வீற்றிருக்க காந்தி எளிமையான பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். உலக சமாதானத்துக்காக, ஒற்றுமைக்காக கடவுளை வணங்கினார். ஜனங்களிடையே தேச பக்தியும், தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் வளர பிரார்த்தனைக் கூட்டத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே பேசினார்.

புத்தரும், மகாவீரரும் ஏசுநாதரும், நபிகள் நாயகமும் செய்த
மார்க்க சேவையை அன்று மகாத்மா செய்து கொண்டிருந்தார்.
இந்து - முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தினார்.


மெளண்ட்பேட்டன் கவர்னர் ஜெனரலாக இருக்க காங்கிரசு ஆமோதித்தது. ஆங்கிலேயர்களில் ஒரு வித்தியாசமான ஆசாமி மெளண்ட்பாட்டன். நேருவின் நேசக்கரங்களுக்குள் கைகோர்த்து அதிரடியாக நடவடிக்கைகளை பேட்டன் எடுத்தார். ஜின்னாவின் கண்களுக்குள் கருக்கொண்டிருந்த பாகிஸ்தான் கனவையும் நனவாக்கினார். கிழக்கு வங்காளமும், மேற்கு பஞ்சாபும், சிந்தும் பாகிஸ்தானாக உருப்பெற்றது. மற்றப்பகுதிகள் எல்லாம் இந்திய யூனியனாயின. மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத் இந்திய
யூனியனில் இணைய மறுத்து முரண்டு பிடித்தாலும் பட்டேல் நெறிப்படுத்தி ஒருங்கிணைத்தார்.

இந்தியத் துணைக் கண்டத்தில் இந்தியக்கொடி பட்டொளி வீசிப்
பறக்க ஆரம்பித்தது.ராஜாஜியை கவர்னர் ஜெனரலாக்கிவிட்டு, மெளண்ட்பேட்டன் இங்கிலாந்து இளவரசியின் திருமணத்தில் கலந்து கொள்ளப் புறப்பட்டார்.
ஆகக்கடைசி வெள்ளையனும் கப்பலேறிய பிறகு சுதந்திர
இந்தியாவை ஆட்சி செய்கின்ற காட்சியையும் காந்தி
கண்டுகளித்தார்.
நேரு முதலமைச்சர். படேல் உள்நாட்டு அமைச்சர். சண்முகம்
செட்டியார் நிதியமைச்சர். அம்பேத்கார் சட்ட அமைச்சர்; சர்தார் பல்தேவ்சிங் பாதுகாப்பு அமைச்சர். ஜெகஜீவன்ராம் தொழிலமைச்சர்; மத்தாய் போக்குவரத்து அமைச்சர்; காட்கில் சுரங்க மின்சார மந்திரி; சியாமபிரசாத் முகர்ஜி உணவு அமைச்சர்; அபுல்கலாம் ஆசாத் கல்வி அமைச்சர்; அம்ருத்கெளரி சுகாதார அமைச்சர்; கித்வாய் வர்த்தக அமைச்சர்; கோபால்சாமி அய்யங்கார் உபரி மந்திரி; ராஜேந்திர பிரசாத் அரசியல் நிர்ணயசபைத் தலைவர்; மோகன்லால் சக்சேனா அகதிகள் மந்திரி
என்று, இன்று போல இரண்டடுக்கு மூன்றடுக்கு என்றில்லாமல் மிகக் குறைந்த மந்திரி சபையோடு தேச பரிபாலனம் துவங்கியது.
மகாத்மாவின் உழைப்பு வீண்போகவில்லை! அவரின் தவம் பலித்தது.கத்தியின்றி... இரத்தம் இன்றி அகிம்சா மூர்த்தியின் கனவு நிறைவேறியது.


இந்த ஆகஸ்ட் 15!

இந்தியாவிற்குக் கிடைத்த சுதந்திர நாள் என்பதை
விட
அகிம்சையின் வலிமை அறியப்பட்ட நாள் என்பதுதான்
சரியானது.