Thursday, March 08, 2007

<>சர்வதேசப் பெண்கள் தினம்-மார்ச்,2008

"Every person is entitled to respect and
equal opportunities within a just society."

"Equality is not something someone else gives you or
does for you, it is something you give to and do for
yourself. - Marjorie Hansen Shaevitz





சர்வதேசப் பெண்கள் தினம்.


பெண்கள் தினம் என்றால்... தீபாவளி, பொங்கல் தெரியும். அது என்ன பெண்கள் தினம்? என்று உழைக்கும் கீழ்த் தட்டு பெண்கள் வர்க்கம் அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்த பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. இன்றைக்கும் வேலைக்குச் சென்று ஆண்களுக்கு நிகரான சுமைதூக்கும் வேலைகளைக்கூட செய்து வயிற்றைக்கழுவும் உழைக்கும் வர்க்கத்துக்குத் தெரியாத சர்வதேசப் பெண்கள் தினம் முகிழ்க்கக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம்தான் காரணம் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!


பெண்கள் தினம்...


அதுவும் சர்வதேசப் பெண்கள் தினம்?! இப்படி எல்லாம் ஒரு நாளைச் சொல்லி நாம் பெண்கள் தினத்தைக் கொண்டாட வேண்டிய நிலையில் இருக்கிறோம். மகளிருக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளுக்கு சட்டப்படி ஒரு முற்றுப்புள்ளி என்பதை மையக் கருத்தாகக்கொண்டு இந்த ஆண்டு மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது!


மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர்தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால் எதற்காக மார்ச் எட்டாம்தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறுகளில் வழுக்கிப் பின்னோக்கி நழுவினால் வியப்பூட்டும் பலதகவல்கள் நமக்கு அறியக் கிடைக்கிறது.1789ம் ஆண்டு ஜூன் 14ம்தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம்(அரசனின் ஆலோசனைக்குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப்புரட்சியின்போது பாரீஸில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்!
ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும் என்றும் வேலைக்கேற்ற ஊதியம், எட்டுமணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்! கிளர்ச்சிகள் என்றால் ஏனோதானோவென்று இல்லாமல் அடுப்பூதும் பெண்கள், இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை கையில் எடுத்துக்கொண்டு பாரீஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாக கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று கர்ஜித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்வேன் என அறிவித்தான். எதுவரினும் சந்திப்போம் என்று அஞ்சாமல் இரவு முழுக்க தெருக்கூட்டம் நடத்தி காலையில் அரசமாளிகை நோக்கி அணிவகுத்துக் கிளம்பினர் ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்!
அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரசமாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது! அரசமாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்காப்பளர் இருவரையும் திடீரென பாய்ந்து தாக்கி கொன்றனர். இதைக் கேட்ட அரசன் அதிர்ந்துபோனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன், என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்திருந்தவர்களைச் சமாதானப்படுத்தினான். இயலாது போக அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்!
இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்! தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண்பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர்போராட்டங்களில் ஈடுபட..ஆளும்வர்க்கம் அசைந்துகொடுக்கத் துவங்கியது. அடிக்கிறபடி அடித்தால்தானே அம்மியும் நகரும்; இத்தாலியிலும் பெண்கள் வாக்குரிமை கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில்(Prussian King) இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக்குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான்.
அந்த நாள் 1848ம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும்!
அந்த மார்ச் 8ம் நாள் தான் சர்வதேச பெண்கள் தினம்
உலகெங்கும் அனுசரிக்கப்பட வித்தாக அமைந்தது.
நியூயார்க்...
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அகன்றிட உலக அளவில் அனைவரும் ஒருங்கிணைந்து பெண்களின் மேம்பாட்டிற்கான சில பொது நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்ற சிந்தனை உதயமான இடம்... அமெரிக்கா.
அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயார்க். இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறுமணி நேரம் வேலை செய்து குறைவான ஊதியத்தையேபெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால்தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.
1857ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் துவங்கிய பொன்னாள்! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908ல் எங்களுக்கு வாக்குரிமை கிடையாதா? என்று கிளர்ந்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது.
அதன் விளைவு 1910ல் கோபன்ஹேகனில் சர்வதேச பெண்கள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது. மார்ச் 8....!
அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்படது.
இந்த அமைப்பின் சார்பில் 1911ம் ஆண்டு மார்ச் 19ம்தேதி ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்துகொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.
இந்தக் கூட்டத்தில்தான், அரசன் லூயிச் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8ஐ நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்!
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய பெண்கள் ஜெர்மனியில் பெண்கள் வாக்குரிமை கேட்டு மில்லியன் துண்டுப்பிரசுரங்களை நாடெங்கும் வினியோகித்தனர். ஜெர்மனியில் மகளிர் துவங்கிவைத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் மகளிர் தங்கள் பிரச்னைகளுக்காக போராடவேண்டும்; போராடினால்தான் உரிமைகளைப் பெற முடியும் என்று எண்ணத் தலைப்பட்டு போராடத் துவங்கினர்! அன்று துவங்கிய போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது! காலத்தின் தேவைக்கேற்ப அவர்கள் எதிர்கொள்ளும் சவல்களை முன் வைத்துப் போராடி வருகின்றனர்!
இன்றைக்கு பெண்கள் இல்லாத துறை உண்டா? மண்ணிலிருந்து விண்ணிற்கும், அலுவலரிலிருந்து ஆய்வாளர் வரையிலும், நிதியிலிருந்து நீதித் துறை வரையிலும் என்று சகலதுறைகளிலும் முகம் காட்டுகின்றனர்! அதிகாரங்களில் தலைமைப் பதவிக்கும் வந்தனர்; ஆண்களுக்கு நிகராக பலதுறைகளில் பிரகாசிக்கின்றனர்; நோபல் பரிசுகளை வாங்கிக் குவித்தனர்; ஆட்சியைப் பிடித்தனர்; அப்படி ஆட்சியில் அமர்ந்தாலும் அவர்களாவது அங்காவது பெண்கள சம்பந்தப்பட்ட பிரச்னைகளை முற்றிலுமாக களைந்தார்களா? களைய முடிந்ததா? என்ற கேள்விகள் ஒரு புறம் வலுவக எழுந்தாலும் அடிநாளில் அவர்கள் மனங்களில் எங்களாலும் முடியும் என்ற விதை இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறது என்றால் மிகையில்லை! பெண்களுக்கு எதிரி பெண்களேவா?" சிசு பிறந்ததும், பெண் எனத் தெரிந்ததும் நெல்லோ எருக்கம்பாலோ கொடுத்துக் கொன்றுவிடும் உசிலம்பட்டிக் கொடுமை; கணவன், மாமனார், மாமியார் சித்திரவதை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு பெண்ணை சமையலறையில் எரித்துவிட்டு, ஸ்டவ் வெடித்து இளம் பெண் சாவு என்று காவல் துறைப் பதிவேடுகளில் மாறும் அவலம்; சமூகத்திற்கு அரணாக, வேலியாக இருக்கவேண்டிய காவல் நிலையங்களே கற்பழிப்பு மையங்களாகின்றகொடூரம் - இவைகளெல்லாம் குக்கிராமத்திலிருந்து பெரு நகரம் வரை அன்றாடம் நடைபெறும் செய்திகளாகிப் போய்விட்டன. நாட்காட்டிகள் கிழிபடுகிற ஒவ்வொருநாளும் பெண்கள் கிழிபடுகிற, வதைபடுகிற, சிதைபடுகிற, சின்னாபின்னப்படுகிற செய்திகள் நாளிதழ்களில் இடம் பெறாத நாளுண்டா?" பெண்களுக்கு குறைவான ஊதியம், பணியிடங்களில் மோசமான முறைகளில் நடத்துதல், பெண்களுக்கு வாக்குரிமை மறுப்பு, துறை அமைச்சர்களே துறைச் செயலாளர்களைத் துயிலுரியத் துணிந்துடும் அவலங்கள்....இப்படி பெண்களுக்கு எதிரான செயல்பாடுகள், கொடுமைகள் அகன்றிட, இனி ஒரு நாளும் அனுமதியோம்என்று ஒவ்வொரு ஆணும் ஏன்? ஒவ்வொரு பெண்ணும் கூட சபதம் எடுத்துக்கொள்ள இந்த நாளில் முன்வருவோம்.
ஆணும் பெண்ணும் சமம் என்கிறோம்; சம ஊதியம் உலகில் பெரும்பாலான நாடுகளில் இன்றைக்கும் கூட கிடையாது என்பது வருந்தத்தக்க ஒன்று; ஆண்களுக்கு இணையாக பெண்கள் பல துறைகளில் பிரகாசிக்கின்ற இந்த நாளிலும், இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றில் ஒருபங்கு இட ஒதுக்கிட்டுக்கு ஒருமித்த கருத்து ஏற்பட வழியைக் காணோம் என்பது துரதிர்ஷ்டமானது. பெண்களே, நீங்கள் மூன்றில் ஒரு பங்காக முடங்கிப் போவதில் சம்மதமா? உங்களிடம் என்ன திறமையில்லை? ஆணுக்குப் பெண் ஈங்கு இளைப்பில்லை கண்டீர்..." என்று எங்கும் எதிலும் துளிர்த்திடுங்கள்!
ஆண்களுக்கு இல்லாத இட ஒதுக்கீடு,
எங்களுக்கு எதற்கு? என்று முரசறைவீர்!
புத்துணர்ச்சியோடு புத்துலகம்
படைக்கப் புறப்படுங்கள்!!!
ஐக்கிய நாடுகள் அமைப்பு...
உலகில் வறுமைக்கோட்டிற்க்குக் கீழ் உள்ளவர்களில் நூற்றுக்கு 70 சதவீதம்பேர்கள், அதாவது 55 கோடிப் பெண்கள் என்பது கசப்பான உண்மை. உலக உணவுத் திட்ட அமைப்பின் தெற்காசியபொறுப்பாளர் பெட்ரோ" ஏழை எளியோரின் பொருளாதாரமேம்பாட்டுக்கு உணவு உதவியை மகளிரிடம் வழங்கும்போது அது குடும்பத்துக்கு பாதுகாப்பையும், அவர்கள்குழந்தைகளின் எதிர்கால உருவாக்கத்துக்கும் முக்கியமானதாக அமையும் " என்று குறிப்பிட்டிருக்கிறார். மீனைச் சாப்பிடக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக் கொடு என்பதற்கொப்ப பெண்களின் எதிர்கால வழ்வைதொலை நோக்கோடு ஐக்கிய நாடுகளின் அமைப்பு அணுகியுள்ளதை வரவேற்போம்.68வது இடம்...ஜெனீவா நாட்டைச் சேர்ந்த, "இண்டர் பார்லிமெண்டரி யூனியன் என்ற அமைப்பு, உலகில் நாடுகள் பெண்களுக்குஅளித்துள்ள முக்கியத்துவம் குறித்து அந்த நாடுகளின் பாராளுமன்றங்களில் அளித்துள்ள பிரதிநித்துவம் பற்றிஒரு ஆய்வை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
177 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவிற்கு68வது இடம் கிடைத்துள்ளது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு, பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சித் திட்டங்கள்என்று வாய்கிழியப் பேசும் இந்திய அரசியல் வாதிகளுக்கு இந்த ஆய்வறிக்கை ஒரு சவுக்கடி!
இந்தியப்பாராளுமன்றத்தில் உள்ள 543 உறுப்பினர்களில் 49 பேர்களே பெண்கள். அதாவது வெறும் 9சதவிகிதம்.இதற்கு அரசியல்வாதிகள் மட்டுமா காரணம்? அரசியலில் பெண்கள் நுழைய தயங்குவது காரணமா? இந்த நிலைமாறிட உலகளாவிய பெண்கள் அமைப்புகள் தங்கள் சிந்தனையைச் செலவிடவேண்டும். சமையலறையே...ஒரு நாட்டின் வளர்ச்சி அந்த நாட்டின் மனித வளத்தைப் பொறுத்தே அமையும். மனித சக்தி வளர்ந்த நாட்டிலும்,வளர்ந்து வருகின்ற நாட்டிலும் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது? வளர்ந்த நாட்டில் இல்லாத மனித இனப் பாகுபாடு வளர்ந்து வருகின்ற மற்றும் பின் தங்கிய நாடுகளில் இருப்பதைக் காண்கிறோம். மனித இனத்தில் பாகுபாடு காட்டுவதென்பது மனித சக்திக்குத் தடையாக அமையும். அத்துடன் அது சமூக வளர்ச்சியையும் பாதிக்கும். ஆண் இனத்தவர்கள் பெண் இனத்தின் ஆற்றலையும், செயல்பாடுகளையும் அங்கீகரிக்காமல் இருத்தல், நசுக்குதல், போன்ற செயலில் ஈடுபட்டு ஒரு இனத்தின் சுய முகமே நசுங்கிப் போயிற்று.அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்று சமையலறையே சம்சாரத்தின் இருப்பிடம் என முகவரி சொல்லிவைத்தோம்.
ஆண்கள் துணையில்லாமல் பெண்களால் நிமிர முடியாது என முடக்கி வைத்தோம். இது இன்று நேற்று நடப்பதல்ல; சிலபல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகின்ற அவலம் இது! துச்சாதனன் துகிலுரிந்த காலத்திலிருந்து தொடர்கதையாய் தொடர்ந்திடும் பெண்ணினக் கொடுமைகள் வரலாற்றின் வடுக்கள் எனலாம். உலகின் முதல் தனியுடமை பெற்ற ஆதிகால மனிதன் முதற்கொண்டு இதை எழுதுகிற நானும் வாசிக்கிற நீங்களூம் அறிந்தோ அறியாமலோ மலர்ந்த இன வளர்ச்சிக்குத் தடை செய்தவர்கள் என்ற சாதாரண உண்மையை ஒப்புக்கொண்டாக வேண்டும்





கருத்தியல் சிந்தனை...


" மங்கையராய்ப் பிறப்பதற்கே மா தவம் செய்திட வேண்டுமம்மா...", என்றோம்; " உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்..." என்றோம்; இந்தப் போற்றிப் பாடிய துதிகளுக்கு அப்பால், " வினையே ஆடவர்க்கு உயிரே - மனையுரை மகளிருக்கு ஆடவர் உயிர்," என்றும் "உண்டி சிறுத்தல் பெண்டிற்கழகு" என்றும் இரும்புத்திரைகளை அடுக்கடுக்காய் அடுக்கி வைத்தோம். உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பெண்மைக்குள் மென்மையை வலுவில் ஏற்றி அவர்களைக் கற்புக்கனலிகளாக, அழகுப் பதுமைகளாக, சுகம் தரும் நுகர்ச்சிப் பொருளாக, ஆண் உடமைப் பொருளாக ஆக்கி வைத்தோம்.
பெண்ணினத்தைப் பொருளியல் சார்ந்த உழைப்பிலிருந்து பிரித்து வைத்து, பொருளாதார நிலையில் தற்சார்பு நிலையை ஏற்படுத்தி, அறிவுப்பூர்வமாக அவளை முடமாக்கிய ஆணினத்தின் கருத்தியல் சிந்தனை அபார அடக்குமுறை கண்டது என்பதை வரலாற்றில் தெளிவாய்ப் பதியவைத்ததில் ஆணாய்ப் பிறந்த அனைவருக்கும் பங்குண்டல்லவா?
உலகின் சரிபாதிப் பேரின் சிந்தனா வளர்ச்சியை சமயம், தத்துவம், குடும்பம், கலாச்சாரம், ஆகியவற்றினூடாகத் திட்டமிட்டுத் தடை செய்தோரில் ஆண்களாய்ப் பிறந்த அனைவருக்கும் பங்குண்டு என்பதை எவராலும் மறுக்கஇயலாது.


பெண்களுக்குப் பெண்களே...


பெண் சமத்துவக் கொள்கையில் சரியாக இருக்கும் நம்மில் பலர் நடைமுறை என்று வருகின்றபோது கோட்டுக்குவெளியே ஓடிப் போகிறோம். முதலில் நம் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளி குறைக்கப்பட்டாகவேண்டும். ஆண் பெண் சமத்துவம் இல்லை என்று பெண்கள் கோஷமிடுகிற அதே நேரத்தில் மாமியார் மருமகளைக்கொடுமைப்படுத்துவது மருமகளை உயிரோடு கொளுத்துவது போன்ற கொடுஞ்செயல்களைச் செய்வதும் பெண்கள்தான். வரதட்சனைக் கொடுமையால் மட்டும் மாமியார்களால் எரித்துக் கொல்லப்படும் இந்திய மருமகள்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 6205 பேர்கள் என்று காவல்துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. காவல் துறையின் கண்களுக்குத் தப்பிய நிழல் நிஜங்கள் எத்தனையோ? எனவே எதிர்காலத்தில் மாமியாராகப் போகும் இன்றைய மருமகள்களும் இந்தப் பாதகங்களைச் செய்யாமலிருக்க உறுதி கொள்ளவேண்டும். பெண்களுக்குப் பெண்களே எதிரிகள் என்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.


தன்னந்தனியராய்...


அடையாறிலிருந்து அண்ணா நகர் வரை பஸ்ஸில் பயணப்படாத பெண்கள் கூட, இன்று அமெரிக்காவிலும்ஆஸ்திரேலியாவிலும், சிட்னியிலும் சிங்கப்பூரிலும் தன்னந்தனியராய்ப் பணி புரிகிற அற்புதம் காண்கிறோம். " ஆணுக்குப் பெண் சளைத்தவர் ஈங்கில்லை கண்டீர் " என்கிற கவிஞனின் கனவு நனவாகிற உன்னதம் காண்கிறோம். ஆயினும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, குடும்பங்களில் அடக்கியாளப்படும் தன்மை, ஒரே உழைப்பிற்கு சரி சமமற்ற ஊதியம் பெறும் முரண்பாடுகள், கருவறையிலேயே கல்லறை கட்டப்படும் பெண் சிசு பிரச்னைகள் இன்னும் வெவ்வேறு வகைகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் தீங்குகள் முடிவடைந்துவிடவும் இல்லை; குறையவுமில்லை.


எங்கோ ஒரு பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்புக்குமரண தண்டனையாக மூன்று இளம் பெண்கள் இன்னொரு புறம் எரித்துக் கொன்றுவிட்ட கொடும்பாதகம்; இந்த இளம் மலர்கள் கருக்கப்பட்டு சாம்பலாக்கபப்ட்ட கொடுமை! அதனினும் கொடுமை இந்தக் கொடுமைக்கு நடந்த கொடுமைகள் நீதித்துறையில் ஒருவழியாக இந்தமூன்று மலர்கள் கருக்கப்பட்டதற்கு

கொடியவர்களுக்குமரணதண்டனை என்ற உச்ச பட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது.பொருத்தம்தான் என்றாலும் இவர்களுக்கு ஆய்ள்தண்டனை அளித்திருக்க வேண்டும்!ஆயுள் முழுக்க அவர்கள் செய்த தீஞ்செயலை எண்ணிஎண்ணி வருந்துவதேஅவர்களுக்கு மிகப்பெரும்தண்டனை என்பது எனது கருத்து ஆகும்! ......நெஞ்சு பொறுக்குதில்லை நமக்கு...!?


யுவன்களும் யுவதிகளும்...


அமெரிக்காவில் மோனிகாவாகவும், தமிழ் நாட்டில் பத்மினியாக, பெங்களூரில் பிரதிபாக்களாகவும், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் மீனா போன்றும் பெண்கள் பாழ்படுத்தப்படும் நிலை முற்றிலும் ஒழிய கடுமையான ஆயுள் தண்டனை தான் இதற்குச் சரியான தீர்வாக அமையும்.


இல்லையென்றால் இன்னும் நூறு நூற்றாண்டுகளுக்கு சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடினாலும் மோனிகாக்களும் பத்மினிகளும் பிரதிபாக்களுகளும் மீனாக்களும் தொடர்வதைத் தடுத்து நிறுத்த இயலாது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும், இதர தீங்கிழைப்புகளுமான குற்றங்கள் இந்தியக் காவல் துறைப் பதிவேடுகளில் வருடம்தோறும் சராசரியாக பதிவாவது மட்டும் எட்டு லட்சத்து 88 ஆயிரத்து 695 ஆகும். சர்வதேச அளவில் பில்லியன் கணக்கில் பெண்கள் தொடர்பான குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. அறிவு வளர்ந்திருக்கிறது; அறிவியல் வளர்ந்திருக்கிறது; தாயாய், தாரமாய், சகோதரியாய் பெண்களை பகுத்தறிந்து போற்றும் பண்பு மட்டும் இன்னும்...நம்மிடம்?!


" இளம் பெண் ஒருத்தி உடம்பு முழுக்க தங்க நகைகளை அணிந்துகொண்டு எவ்வித அச்சமுமின்றி நள்ளிரவில்தன்னந்தனியாக வெளியே சென்று பத்திரமாக வீட்டுக்குத் திரும்ப முடியும் என்கிற நிலை என்று ஏற்படுகிறதோ, அன்று தான் நாடு உண்மையான விடுதலை அடைந்ததாக அர்த்தம்" என்றார் மகாத்மா.


மகாத்மாவின் கனவு நனவாக இந்த சர்வதேச பெண்கள் தினத்தில் உலகில் உள்ள ஒவ்வொரு யுவனும் யுவதியும் உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும். ஆம்! பிரஞ்சுப் புரட்சியில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வீறுகொண்டெழுந்து சென்ற பெண்களோடு நாங்களும் உங்களோடு என்று புறப்பட்டுப் போன வேகத்தோடு! யுவதிகள்... மட்டுமல்ல யுவன்களும்!!!

No comments: