Wednesday, March 01, 2006

தமிழ்நாட்டு வீரப் பெண்மணிகள்

<>தமிழ்நாட்டு வீரப் பெண்மணிகள்<>

ங்கில ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியர்கள் நடத்திய போராட்டம் ஒரு வீர சகாப்தம். அந்த சுதந்திர வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட வீரப் பெண்மணிகள் பற்றி உலகப் பெண்கள் தினத்தில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

இது ஒரு முழுமையான பட்டியல் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்துள்ள ஒரு சிலரை இங்கே வரிசைப் படுத்தியுள்ளேன்.

அஞ்சலை அம்மாள்:

அஞ்சலை அம்மாள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல முறை சிறை சென்றவர். இவர் குடும்பமே விடுதலைப் போரில் ஈடுபட்டது. 1931ல் உப்புச் சத்தியாக்கிரகம், 1940ல் தனி நபர் சத்தியாக்கிரகம் ஆகியவற்றில் ஈடுபட்டவர். சென்னையில் தடைவிதிக்கப்பட்ட காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கிப் பெண் படையுடன் கைதானவர். சுதந்திரத்திற்குப் பின் ஜில்லா போர்டு உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.


அசலாம்பிகை அம்மாள்:

திருப்பாபுலியூர் அசலாம்பிகை அம்மாள் சிறந்த மேடைப் பேச்சாளர்.
இந்திய விடுதலை இயக்கச் செய்திகளைக் "காந்தி புராணம்" என்ற
பெயரில் எழுதியவர். 19.9 1921ல் கடலூருக்கு காந்தி வந்த போது அவருக்கு வரவேற்புரையைத் தயாரித்துப் படித்தவர்.

கே.பி.ஜானகி அம்மாள்:

தேசபக்திப் பாடல்களைப் பாடி மக்கள் மத்தியில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் பாடல்கள் தென் மாவட்டங்களில் பிரபலம். இவர் கணவர் குருசாமியும் சுதந்திரப் போராட்ட வீரர். யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காக தென்னிந்தியாவிலேயே முதன் முதலாக தண்டிக்கப்பட்டவர். 1992ம் ஆண்டு மறைந்தார்.


சரஸ்வதி பாண்டுரங்கம்:

இவர் உப்புச் சத்தியாக்கிரகம் உட்பட பல போராட்டங்களில் கலந்து கொண்டவர். மகளிர் உரிமைக்காகப் பாடுபட்டவர். சென்னையில் 'கன்னியா குருகுலம்' என்ற அமைப்பை உருவாக்கி மகளிர் சேவையில் ஈடுபட்டார்.


வேலு அம்மாள்:

சிவகங்கை மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்த வேலு அம்மாள் ஆகஸ்ட் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


கேப்டன் லட்சுமி:

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் இந்திய தேசிய இராணுவத்தில் பெண் தளபதியாக பணியாற்றியவர். பர்மா காடுகளில் இவரை பிரிட்டிஷ் அரசு கைது செய்தது. மருத்துவரான இவர் தற்போது மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டு சேவை செய்து வருகிறார்.

ருக்மினி லட்சுமிபதி:

1892ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி சென்னையில் பிறந்தவர். அந்தக் காலத்திலேயே கலப்புத் திருமணம் செய்து கொண்டவர். வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர். 1937ல் இராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் துணை சபாநாயகராகவும், 1946ல் பிரகாசம் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராகவும் பதவி வகித்தவர். முதல் பெண் அமைச்சர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. 1951ல் காலமானார்.

அம்புஜம்மாள்: 1932ல் அந்நியத் துணி புறக்கணிப்பு இயக்கத்தில் தீவிரமாக பயாற்றியவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராக இருந்திருக்கிறார்.


பத்மாசினியம்மாள்:

ஒத்துழையாமை இயக்கம் முதல் ஒவ்வொரு போராட்டத்திலும் மறியல்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றவர். தன் சொத்துக்களைத் தானமாக வழங்கியவர். 1897ல் காலமானார்.


வி.கே.ஏ.பங்கஜத்தம்மாள்:

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தனது ஏழு வயது முதல் பஜனை பாடியும்மேடைகளில் பேசியும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பணியில் முழுமையாக ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர். 1937ல் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.


லட்சுமி பாரதி:

நாவலர் சோம சுந்தரபாரதியின் மகளும் விடுதலைப் போராட்ட வீரர் கிருஷ்ணசாமி பாரதியார் மனைவியுமாவார். 1932ல் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். 1937ல் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.


பத்மாவதி ஆஷா:

திருப்பூரில் வாழ்ந்தவர். 1930ல் உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று பல முறை சிறை சென்றவர்.


சகுந்தலா பாய்:

திருவெண்ணெய் நல்லூர் அருகே கிருபா ஆசிரமம் என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி ஏழைகளுக்கு கல்வி மருத்துவ சேவையில் ஈடுபட்டார். உப்புசத்தியாக் கிரகம் உட்படபல போராட்டங்களில் ஈடுபட்ட இவர் பல வெளிமாநில போராட்டங்களுக்கும் சென்று போராட்டங்களில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சு அம்மாள்:

இவர் சிறந்த வழக்கறிஞர். மகளிர் மேம்பாட்டுக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டவர். சென்னை மாகாண சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்தவர்.


அம்மு சாமிநாதன்:

1942ல் நடைபெற்ற ஆகஸ்டு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். பலமுறை சிறை சென்ற இவர் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும் 1946ல் இடைக்கால நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.


அகிலாண்டத்தம்மாள்:

இவர் மதுரையைச் சேர்ந்தவர். பல போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்றவர்.


பர்வத வர்த்தினி:

1932ல் நடைபெற்ற ஜவுளிக் கடை மறியல் போராட்டத்தில் தீவிரமாக ஈடு பட்டு பல முறை சிறை சென்றவர்.

No comments: